×

4 ஆண்டில் கோயில் திருப்பணிக்கு ரூ.1330 கோடி நன்கொடை அனைத்து மதத்தினரும் போற்றும் பொற்கால ஆட்சி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

நெல்லை: நெல்லை டவுனில் உள்ள சுவாமி நெல்லையப்பர் கோயிலில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்தேர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தனசேகர், பாலசுப்பிரமணியம் ஆகியோர் 200 கிலோ வெள்ளிக்கட்டிகளை வழங்கினர். இவர்களிடமிருந்து வெள்ளிக்கட்டிகளைப் பெற்ற அமைச்சர் சேகர்பாபு அவற்றை திருத்தேர் பணிக்காக ஒப்படைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டி: அனைத்து மதத்தினரும் போற்றும் பொற்கால ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. சாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டு அவரவர் விருப்பப்படி வழிபாடுகளை மேற்கொள்ள உறுதுணையாக இருந்து, வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பவராக தமிழக முதல்வர் விளங்குகிறார். இந்துசமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டதில் இருந்து, கடந்த 4 ஆண்டுகளில் தான் கோயில் திருக்குளம் பராமரிப்பு முதல் குடமுழுக்கு செய்வது வரை அனைத்து நலத்திட்ட பணிகளும் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெல்லையில் கடந்த ஆண்டு ஆனித்திருவிழா தேரோட்டத்தில் வடம் அறுந்து போதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. மேலும் சுவாமி திருத்தேர்களில் உள்ள பொம்மைகள் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவை உள்ளிட்ட தேரோட்டத்துக்கான அனைத்து புனரமைப்பு பணிகளும் சுமார் ரூ.1.20 கோடி செலவில் தற்போது செய்யப்பட்டு உள்ளன. 1991ம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட இந்த கோயிலின் வெள்ளித்தேருக்கு ரூ.14 லட்சம் செலவில் புதிதாக மரத்தேர் செய்யப்பட்டுள்ளது.

150 கிலோ வெள்ளி இதுவரை நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 கிலோ நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.26 லட்சம் வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் இப்பணிக்காக 75 கிலோ வெள்ளி பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்படும். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1330 கோடியை நன்கொடையாளர்கள் கோயில் திருப்பணிக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* சங்கிகளால் நடத்தப்படும் முருகர் மாநாடு
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘முருகன் மீது அன்பும், பக்தியும் கொண்ட உண்மையான முருக பக்தர்கள் மாநாடு நடத்தினால், மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு கண்டிப்பாக செல்வேன். மக்களை இனத்தால், மதத்தால் பிளவுபடுத்த வேண்டும் என சங்கிகளால் நடத்தப்படும் மாநாடு மதுரையில் நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7ம் தேதி ரூ.400 கோடி செலவில் 7 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. உண்மையான முருக பக்தர்கள் அங்குதான் செல்வார்கள்’’ என்றார்.

The post 4 ஆண்டில் கோயில் திருப்பணிக்கு ரூ.1330 கோடி நன்கொடை அனைத்து மதத்தினரும் போற்றும் பொற்கால ஆட்சி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu Peramitham ,Nellai ,Swami Nellaiappar ,Nellai Town ,Palani Temple ,Trustee Committee ,Subramaniam ,Committee ,Dhanasekar ,Balasubramaniam ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...