தவ்பா – திரும்புதல்

இஸ்லாமிய வாழ்வியல்

தவ்பா எனும் சொல்லுக்குத் திரும்புதல், மீளுதல் என்று பொருள். யாரை நோக்கி யார் மீளுதல்? யாரை நோக்கி யார் திரும்புதல்? இது என்ன கேள்வி?

‘பாவமன்னிப்புக் கோரும் அடியான்தான் இறைவனை நோக்கித் திரும்ப வேண்டும், இறைவனை நோக்கி மீளுதல் வேண்டும். இது தெரியாதா’ என்பீர்கள்.

ஆனால் தவ்பா எனும் சொல்லுக்கு இறைவனும் திரும்புகிறான், இறைவனும் மீளுகிறான் எனும் பொருளும் உண்டு. அப்படியானால், இறைவன் யாரை நோக்கித் திரும்புகிறான்? அடியானை நோக்கி.

பாவத்தின் காரணமாக அடியானின் பக்கம் தடைப்பட்டிருந்த இறைவனின் கருணைப் பார்வை பாவமன்னிப்பின்போது அடியானின் மீது மீண்டும் குவிகிறது. இறைவன் கருணையுடன் அவன் பக்கம் திரும்புகிறான்.

“அடியானும் திரும்புகிறான்… ஆண்டவனும் திரும்புகிறான்.” ஆம். அடியான் பாவமன்னிப்புக் கோரும்போது இறைவன் பெரிதும் மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை நபிகளார் ஓர் உவமை மூலம் சொல்லியுள்ளார்கள்.

ஒரு நீண்ட பாலைவனம். பயணி ஒருவர் ஓர் ஒட்டகத்தில் தமக்குத் தேவையான உணவு, பானம், உடைமைகள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு பயணம் செல்கிறார். களைப்பு மிகவே வழியில் ஓரிடத்தில் இளைப்பாறுகிறார். சற்றே கண்ணயர்ந்துவிடுகிறார். எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஒட்டகத்தைக் காணவில்லை. உணவு,பானம் எல்லாம் போயிற்று…ஒட்டகம் இல்லாமல் கடும் பாலையில் எப்படிப் பயணிக்க முடியும்?

அழுகிறார்…அரற்றுகிறார்…அதே கவலையில் அப்படியே விழுந்துவிடுகிறார். மீண்டும் எழுந்து பார்த்தவருக்குத் தம் கண்களையே நம்பமுடியவில்லை. அவருடைய ஒட்டகம் அனைத்துப் பொருள்களுடனும் எதிரில் நிற்கிறது. அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியை சொற்களால் விவரித்துவிட முடியுமா?

“திரும்பக் கிடைத்த ஒட்டகத்தைக் கண்டதும் அந்தப் பயணி எப்படி மகிழ்ந்தாரோ அதேபோல் அடியான் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும்போது இறைவனும் மகிழ்ச்சி அடைகிறான்” என்று கூறினார் நபிகளார்.

தவறுகளும் பாவங்களும் செய்யாதவர்கள் யார்? மனிதர்களாகப் பிறந்தால் தவறு செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் பாவம் என்று தெரிந்ததும் அதிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருபவர்தான் சிறந்தவர். நபிகளார் கூறினார்கள்.

“ஆதத்தின் வழித்தோன்றல்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தாம். அவர்களில் சிறந்தவர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருபவர்.” இறைவனின் பக்கம் திரும்புவோம். நம் பாவங்களை அவனிடமே முறையிடுவோம். மனமுருக மன்றாடுவோம். “இறைவா, எங்கள் பாவங்ளை
மன்னிப்பாயாக.”

– சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“யார் பாவ மன்னிப்புக் கோரி, நம்பிக்கையும் கொண்டு நற்செயல்களும் புரிகின்றார்களோ அவர்களின் பாவங்களை இறைவன் நன்மையாய் மாற்றிவிடுவான்.” (குர்ஆன் 25:70)

The post தவ்பா – திரும்புதல் appeared first on Dinakaran.

Related Stories: