×

தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடி நியமனம்: தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பதவி வகிக்க வாய்ப்பு

சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தற்போது 32 நீதிபதிகளே உள்ளனர். இதில், வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 நீதிபதிகள் பணியிடங்களையும் நிரப்ப, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று கூடி முடிவெடுத்தது.அதன் அடிப்படையில், ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்தி குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்படவுள்ளார். கொலீஜியத்தின் தீர்மானத்தில் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை பரிசீலிப்பதற்காக விவாதிக்கப்பட்ட கருத்துகளின்படி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்று கூறப்பட்டுள்ளது. சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, ரிட் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மத்தியஸ்தம் துறையிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் 1966 மே 16ல் பிறந்தார். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1988ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக தொழில் செய்துவந்த இவர், கடந்த 2009ல் மூத்த வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் நீதிமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலாகவும் பதவிவகித்தார். இவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் பட்சத்தில் இவரது பதவி காலம் 2031 மே 25 ஆகும். 2030 ஆகஸ்டில் இந்தியாவில் தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஓய்வு பெற்ற பிறகு 2031 மே 25வரை அதாவது கே.வி.விஸ்வநாதன் ஓய்வு பெறும்வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

ஒன்றிய அரசால் அவரது நியமனம் அங்கீகரிக்கப்பட்டவுடன், உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நேரடியாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் பட்டியலில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் பத்தாவது நபராக இருப்பார். இந்த வகையில் அவர் 9 மாதங்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வரை செல்லவிருப்பது தமிழ்நாடு நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாகும்.

The post தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடி நியமனம்: தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பதவி வகிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,KV Viswanathan ,Supreme Court ,Chennai ,Dinakaran ,
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து