×

‘இது என் திருப்பூர்… அறுத்துப்போட்டுவிடுவேன்…’ சென்னை ரயிலில் பயணிகள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்: வீடியோ வைரல்

திருப்பூர்: சென்னை ரயிலில் வந்த பயணிகள் மீது போதையில் தாக்குதல் நடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை-ஆலப்புழா விரைவு ரயில் மூலம் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். அதிகாலை 3 மணியளவில் ரயில் ஈரோடு வந்து சேர்ந்தது. அப்போது இவர்கள் இருந்த பெட்டியில் ஏறிய 6 பேர் மதுபோதையில் ரயிலில் சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டு புகைபிடித்துக்கொண்டே வந்ததாக தெரிகிறது. குழந்தைகள் இருப்பதால் புகைபிடிக்க வேண்டாம் என ரயிலில் வந்த மணிகண்டனின் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அந்த பெண்ணையும், மணிகண்டனையும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கினர்.
‘‘டேய் வெளியே வாடா. உன்னை அறுத்துப்போட்டுவிடுவேன். இது என் திருப்பூர். என் ரெயில்வே ஸ்டேசன். போலீசாரால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னிடம் மோதினால்ல உன்னை கொன்றுவிடுவேன்’’ என கொலை மிரட்டலும் விடுத்தனர். ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் அந்த போதை வாலிபர்கள் இறங்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து மணிகண்டன் ரயில்வே போலீசில் புகாரளித்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ரயில் பயணிகளை தாக்கி மிரட்டல் விடுத்த 2 பேர் பற்றிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஆர்டி பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன், திருப்பூர் பாளையகாடு பகுதியை சேர்ந்த அசோக் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனை பொள்ளாச்சி சீர்திருத்த பள்ளிக்கும், அசோக்கை சிறையிலும் அடைத்தனர்.
இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரயிலில் பயணிகளை வாலிபர்கள் தகாத வார்த்தைகளில் பேசி, மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

The post ‘இது என் திருப்பூர்… அறுத்துப்போட்டுவிடுவேன்…’ சென்னை ரயிலில் பயணிகள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupur ,Manikandan ,Alappuzha ,
× RELATED புகைபிடிக்க வேண்டாம் என கூறியதால்...