×

மத ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு விநாயகர் கோயில் கட்ட நிலம் தந்த இஸ்லாமியர்கள்: பள்ளிவாசலில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் கோயில் கட்டும் பணி நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. நேற்று அந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 5 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலுக்கு வழங்கினர். விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையை வளர்க்கும் என தெரிவிக்கின்றனர். மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

 

The post மத ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு விநாயகர் கோயில் கட்ட நிலம் தந்த இஸ்லாமியர்கள்: பள்ளிவாசலில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kumbabishekam ,Kangayam ,Ottapalayam Rose Garden ,Padiyur ,Tirupur district ,
× RELATED திருப்பம் தரும் திருப்புகழ்