தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்: பொது சுகாதாரத்துறை தகவல்

* சிறப்பு செய்தி
தமிழகத்தில் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் முடிந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழக எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சுகாதாரத்துறை நடவடிக்கை: ஒரு பகுதியில் காய்ச்சல் ஏற்படும் போது அந்த பகுதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று நீரில் குளோரின் அளவு, ஏடிஸ் கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை, டயர் அகற்றுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை தொடந்து கண்காணித்து வருகிறார்கள். காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

காய்ச்சல் கிளஸ்டர் மற்றும் அடிக்கடி டெங்கு பதிவாகும் பகுதிகளில் புகை அடிப்பது, பாட்டில்கள் போன்றவை சுத்தப்படுத்துவது என தீவிர நடவடிக்கையில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மலேரியா உள்ளதா என்பதை பரிசோதனைகள் மேற்கொள்ள ரத்தம் சேகரிக்கப்பட்டு, அதே நாளில் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடவடிக்கை: பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பள்ளி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். பள்ளியில் உள்ள தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து, கொசு உற்பத்தியாகாமல் இருக்க, அதை இறுக்கமாக மூடுவதற்கு பள்ளி நிர்வாகத்தினருக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

விழிப்புணர்வு: மார்க்கெட், பேருந்து நிறுத்தம், சினிமா தியேட்டர், ரயில் நிலையம் போன்ற அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு, மலேரியா குறித்தும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்து இருக்கவும் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: வீட்டில் கொசு உற்பத்தி உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய டிபிசி பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வார்கள். இந்த பணியாளர்கள் எந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சுகாதார ஆய்வாளர் மூலம் வார அட்டவணை வழங்கப்படும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்வார்கள். எந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுகிறதோ அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு, மலேரியா பரவி உள்ளதா என்பது பரிசோதனை செய்யப்படும். மேலும், மக்கள் தங்களது வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

The post தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: