தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 20ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று காலை அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர். சென்னை மற்றும் சென்னை புறநகரில் அமைப்பு ரீதியாக செயல்படும் 9 மாவட்டங்கள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: