தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் மே 15 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதியில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் நிலவுகிறது; மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மாலை வரை காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும். தென் மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதியில், இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: