சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வெளியே உள்ள சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதே போல் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது.
திண்டுக்கலில் ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென மழை தொடங்கியது. மூன்று மணிநேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பணிக்கு சென்றவர்கள், மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பகுதிகளில் 2வது நாளாக இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போல சேலம், திருக்கழுங்குன்றம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
The post தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை: சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.