தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி கிடைத்தது மாநிலங்களுக்கு வரி பங்கீடாக ரூ.72,961 கோடி விடுவிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வரி வசூலில் இருந்து மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்துக்கான வரிப் பங்கீடாக ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஈட்டும் வரி வருவாயில், மாநிலங்களுக்கு மாதந்தோறும் பகிர்ந்தளித்து வருகிறது. அரசியலமைப்பு விதி 280ன் படி, நிதிக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்யப்படுகிறது.

மாநிலங்களின் பரப்பளவு, மக்கள் தொகை, வரி வருவாய், தனிநபர் வருவாய், காடுகளின் பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப வரிப் பகிர்வு தொகை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த மாதத்துக்கான மாநில வரிப் பங்கீடாக மொத்தம் ரூ.72,961.21 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடி கிடைத்துள்ளது.

இதையடுத்து பீகாருக்கு ரூ.7,338.44 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.5,488.88 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, கேரளாவுக்கு ரூ.1,404.5 கோடி, ஆந்திராவுக்கு ரூ.2,952.74 கோடி, கர்நாடகாவுக்கு 2,660.88 கோடி, குஜராத்துக்கு ரூ.2,537.59 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.1,533.64 கோடி வழங்கப்பட்டுள்ளது என, நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வரிப்பங்கீடு 10ம் தேதிதான் வழங்கப்படும் எனவும், இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் 7ம் தேதியே வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி கிடைத்தது மாநிலங்களுக்கு வரி பங்கீடாக ரூ.72,961 கோடி விடுவிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: