அம்பானி, அதானி உட்பட 4 பேர் குறித்து பேச்சு; ராகுலின் உரை அவை குறிப்பில் இருந்து நீக்கம்: ஏற்கனவே நீக்கியது போன்று நடவடிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மக்களவையில் அவர் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி தனது உரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோர் குறித்து பேசினார். தற்போது மேற்கண்ட நான்கு பேரின் பெயர்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ராகுல் காந்தி தனது 45 நிமிட உரையில், மேற்கண்ட நால்வரின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் ராகுல்காந்தி பேசும்போது, மகாபாரதப் போரின் சக்கரவியூகத்தில் அபிமன்யு (மக்கள்) மாட்டிக் கொண்டதாகவும், அதுபோன்ற சூழல் தற்போது நிலவுவதாகவும் கூறியுள்ளார். அந்த சக்கரவியூகத்தை 6 பேர் கொண்ட குழுவினர் கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக கூறினார். முன்னதாக கடந்த ஜூலை 1ம் தேதி எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஆற்றிய உரையின் போது, அரசியல் சாசன புத்தகத்தின் நகல் மற்றும் சிவபெருமான் படத்தைக் காட்டி பேசினார். அப்போது அவரது உரையின் பெரும்பகுதி அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தனது உரையின் சில பகுதிகளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகருக்கு தனது அதிருப்தியை தெரிவித்து கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post அம்பானி, அதானி உட்பட 4 பேர் குறித்து பேச்சு; ராகுலின் உரை அவை குறிப்பில் இருந்து நீக்கம்: ஏற்கனவே நீக்கியது போன்று நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: