வியர்வை மற்றும் தோல் அரிப்பிலிருந்து விடுபட…

நன்றி குங்குமம் டாக்டர்

வெயில்காலம் முடிந்தாலும், நம் நாட்டு சீதோஷ்ணநிலை வெப்பமாக உள்ளது. வேலைக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்ல என நம் அனைவருமே வெளியில் சென்றாக வேண்டியுள்ளது. வெப்பத்தால், மக்கள் நெரிசலால், காற்றோட்டமில்லாமல் என நாளின் பெரும்பகுதி வியர்வையால் அவதியுற நேரிடுகிறது.உடல் சூடு அதிகமாகி, அதை பாதுகாக்க வியர்வை சுரப்பிகள் அதிக அளவில் வியர்வை நீரைச் சுரந்து உடலை குளிர்விக்க முயல்கிறது. வியர்வை சிலருக்கு நார்மலாக இருக்கும். சிலருக்கோ அதிக வியர்வையில், கற்றாழை வாடை, உடல் அரிப்பு, வேர்க்குரு, தோல் நோய்கள் என கஷ்டப்படுவர். இதை சரி செய்ய அதிகளவு நீர் பருகுதல், நன்னாரி, வெட்டிவேர் குடிநீர் , இளநீர், பதநீர் என குளிர்ச்சியானவற்றை அடிக்கடி பருகிட வியர்வை அதிகம் ஏற்படாது.

தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்ற நீர்க்காய்களை எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடையும். வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பு தடுக்கப்படும்.வாகைப்பூ, விளாமிச்சைவேர், சிறுநாகப்பூ, பாச்சோத்திப்பட்டை போன்ற மூலிகைகளை அரைத்து உடலில் பூசி குளித்துவந்தால் அதிக வியர்வை நீங்கும். பன்னீர் ரோஜா அல்லது ரோஸ் வாட்டரை குளிக்கும் நீரில் இட்டு குளித்து வர, வியர்வை வாடை இராது.

இலவங்க இலை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தனம் போன்றவற்றை அரைத்து உடலில் பூசி குளித்து வர, வியர்வையால் ஏற்படும் வாடை அகலும். வேப்பிலை, மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்து வர, அதிக வியர்வையால் ஏற்படும் வியர்க்குரு, அரிப்பு, நிறமாற்றம் போன்ற பிர்சனைகள் நீங்கும்.

வியர்க்குரு தொந்தரவை குறைக்க, நுங்கின் தண்ணீரை பூசலாம்.ஆவாரம் பூவை அரைத்து உடலில் பூசி குளித்தாலும், வியர்வை வாடை அகலுவதோடு அதை குடிநீராக்கியும் குடிக்கலாம். வியர்வை வாடையை சரிசெய்ய, உணவில் அதிக மசாலா, இறைச்சி உணவுகள், காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை குறைக்க வியர்வை வராது.

அதிக பருமன் மற்றும் ஹார்மோன் மாறுபாட்டால் அதிக வியர்வை சுரக்கும்.நீண்ட நாட்களாக உள்ள அஜீரணம், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவற்றாலும் வியர்வை துர்நாற்றும் ஏற்படும். அவற்றிற்கு, மருத்துவரை அணுகி, தக்க ஆலோசனை பெறலாம்.

வியர்வைக்கென, வேர்க்குருக்கென இருக்கும் டால்கம் பவுடரை உபயோகிப்பது தவறு. அது சரும துவாரங்களை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.முடிந்தவரை 2 வேளை குளிப்பதாலும், குளியல் நீரில் யுடிகோலொன், பன்னீர் கலந்து குளிக்க நாள் முழுவதும் மணமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்பிரமணியன்

The post வியர்வை மற்றும் தோல் அரிப்பிலிருந்து விடுபட… appeared first on Dinakaran.

Related Stories: