×

கரூர் மாவட்டத்தில் முதியோர், குழந்தைகள் இல்லங்களில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

*வாரந்தோறும் நடமாடும் மருத்துவ சிகிச்சை

*தரமான உணவு வழங்கல்

கரூர் : கரூர் மாவடத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் சிசிடிவி கேமாரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் பதிவு பெற்று செயல்பட்டு வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் மாவட்ட கலெக்டர் தஙகவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

அரசின் விதிமுறைகளின்படி, பதிவு செய்து கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவற்றை அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் 10 முதியோர் இல்லங்களில் 229 முதியோர்களும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் 2 குழந்தைகள் இல்லங்களில் 77 குழந்தைகளும் தங்கியுள்ளனர். இந்த இல்லங்கள் அனைத்தும் அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள், ஒற்றை பெற்றோரை கொண்ட குழந்தைகள், வன்முறையின் கீழ் பிரிந்து வந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு கல்வி, உணவு, பாதுகாக்கப்பட்ட தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கத்தில், அவர்களும் சமுதாயத்தில மற்றவர்களை போல சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதற்காக இத்தகையை இல்லங்களுக்கு அனுமதி வழங்கி அதற்கான உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது.

இதனடிப்படையில், காந்திகிராமம் பகுதியில் உள்ள கேண்டில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லம் மற்றும் மணல்மேடு பகுதியில் உள்ள ஐயப்ப சேவா சங்க முதியோர் பரிவாளையம் ஆகிய இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் தங்கும் அறை, சமையற்கூடம், தங்கியுள்ள குழநதைகள் மற்றும் முதியோர்களிடம் தங்கும் அறை, சமையல் கூடம், கழிவறை, குடிநீர் வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், தீ தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா உணவுப் பொருட்களின் அட்டவணை மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மேற்கொள்வதற்காக வாரம் ஒரு முறை நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கரூர் மாவட்டத்தில் முதியோர், குழந்தைகள் இல்லங்களில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur district ,Karur ,Dinakaran ,
× RELATED வெள்ளியணை அருகே கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு பதிவு