புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது..!

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். போக்குவரத்து துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை (மு.கூ.பொ) க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் கனிம வருவாய் ரூ.817.40 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிடவும் மாவட்ட வாரியாக கனிம வருவாய் விபரங்களை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் கனிம வருவாயை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சட்டவிரோத கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு. விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்கள். மேலும் நிலுவையிலுள்ள வருவாய் இனங்களில் கவனம் செலுத்தி நிலுவை தொகையினை விரைந்து வசூலிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது மூலத்திற்கு கொண்டுவருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், அமைச்சர் அவர்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்

மேலும் அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை ஏலத்திற்கு கொண்டு வருமாறும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும். கனிம வருவாயினை ஈட்டவும், அனைத்து அலுவலர்களைவும் கேட்டுக்கொண்டார்கள். வாகனம் கைப்பற்றுகையை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் மேல் கனிம விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறும் கேட்டுக் கொண்டார்கள்

The post புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது..! appeared first on Dinakaran.

Related Stories: