பிரதமர் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: ஒன்றிய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு 10.8.2023க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 12.8.2023 முதல் 16.8.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு 29.9.2023ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் //socialjustice.gov.in/schemes ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: