அரசியல் கட்சிகளின் எதிர்ப்பே இல்லாமல் பொதுத்தேர்தலை சந்தித்த ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று 5வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இந்த சூழலில், வங்கதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வர ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ல் நடந்த போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என்கிற தனி நாடு உருவானது. இப்போரில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த 2018ல் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய தகவல் கிடைத்ததும், நாடு முழுவதும் சாலைகளில் திரண்ட மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பலரும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகையை கைப்பற்றி உள்ளே நுழைந்தனர். பிரதமர் மாளிகையை சூறையாடிய அவர்கள், அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றனர். ரிக்ஷாக்களை எடுத்து வைத்து கையில் கிடைத்த பொருட்களை மக்கள் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் கார் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அமைச்சர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டாக்காவில் உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
* இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்பது யார்?
வங்கதேசத்தில் அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி ஜமான் கூறி உள்ளார். இது தொடர்பாக அதிபர் முகமது சஹாபுதீனை சந்தித்து நேற்றிரவுக்குள் தீர்வு காண்பதாக அவர் உறுதி அளித்திருந்தார். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இடைக்கால அரசுக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்கிற தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
வங்கதேச நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அவசர பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றனர். அப்போது உயர் அதிகாரிகளால் வங்கதேசத்தின் நிலை குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* நாடாளுமன்றமும் நாசமானது
பிரதமர் மாளிகையை சூறையாடிய கும்பல் வங்கதேச நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் உள்ளே புகுந்து இருக்கைகளை அடித்து உடைத்தனர்.
* விமான சேவை, வர்த்தகம் முடக்கம்
டெல்லியிலிருந்து தினந்தோறும் 2 முறை வங்கதேச தலைவர் டாக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை நேற்று உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல இந்தியா, வங்கதேசம் இடையேயான இருதரப்பு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் முடங்கி உள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக ஏற்கனவே நேற்று முன்தினம் முதல் 3 நாட்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற வர்த்தகங்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு வங்கதேச எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
* இந்திய எல்லைகள் உஷார்
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இந்திய எல்லைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, வங்கதேசம் இடையேயான 4,096 கிமீ எல்லைகள் அனைத்திலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்க உத்தரவிட்பட்டுள்ளது. அங்கு நிலைமையை ஆய்வு செய்ய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் பிற மூத்த கமாண்டர்கள் கொல்கத்தா விரைந்துள்ளனர். அனைத்து கமாண்டர்களும், வீரர்களும் உடனடியாக எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். வங்கதேசத்தை ஒட்டிய எல்லை முழுவதையும் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பாதுகாத்து வருகிறது. இந்த எல்லை, மேற்கு வங்கம் (2,217 கிமீ), திரிபுரா (856 கிமீ), மேகாலயா (443 கிமீ), அசாம் (262 கிமீ) மற்றும் மிசோரம் (318 கிமீ) ஆகிய 5 மாநிலங்களில் அமைந்துள்ளது.
* எல்ஐசி அலுவலகம் 7ம் தேதி வரை மூடல்
இந்தியாவின் பொதுத்துறை நிறுவமான எல்ஐசி, வங்கதேசத்தில் உள்ள தனது அலுவலகம் வரும் 7ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது. அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* அஜித் தோவல் சந்திப்பு
ஹிண்டன் விமான தளத்தில் வந்திறங்கிய ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து பேசினார். இதற்கிடையே, ஷேக் ஹசீனா லண்டன் வர இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் உடனடியாகவோ அல்லது இன்று அதிகாலையிலோ ஷேக் ஹசினா லண்டனுக்கு விமானத்தில் செல்வார் என கூறப்பட்டது.
* இந்தியாவிலிருந்து ரயில் சேவை ரத்து
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்படும் அனைத்து வகையான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே நேற்று அறிவித்தது. மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள ஷேக் முஜிபூர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இந்த பிரமாண்ட சிலை மீது ஏறி நின்றபடி சிலர் சிலையை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. ஷேக் முஜிபூர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை. இவர்தான் வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படுபவர். கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். அவாமி லீக் என்கிற கட்சி தொடங்கி தனது மாணவர் பருவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். 1970ல் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று வென்றது. ஆனால் பாகிஸ்தான் ராணுவமும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் ஷேக் முஜிபூர் பாகிஸ்தான் பிரதமராக வருவதை எதிர்த்தனர்.
இதனால் இவர் கைது செய்யப்பட மாபெரும் புரட்சி வெடித்தது. அதைத் தொடர்ந்துதான் வங்கதேசம் என்கிற தனிநாடு கோரிக்கை வலுவடைந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என்கிற தனி நாடு உருவானது. வங்கதேசத்தின் முதல் அதிபராக முஜிபூர் பதவி வகித்தார். பின்னர் 1971 முதல் 1975 வரை பிரதமராக இருந்தார். 1975ம் ஆண்டு இவர் ராணுவத்தின் சதியால் படுகொலை செய்யப்பட்டார். முஜிபூர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அவரது மகள்களான ஷேக் ஹசீனா மற்றும் ஷேக் ரெஹனா ஆகியோர் உயிர் தப்பினர். வங்கதேசம் உருவாக பாடுபட்ட தலைவரின் குடும்பத்திற்கு எதிராக இப்போது வங்கதேச மக்கள் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* இலங்கையில் கண்ட காட்சிகள் வங்கதேசத்திலும் அரங்கேறியது
இலங்கையில் கடந்த 2022ல் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். உடனே போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்து அங்கிருந்து சோபாக்களில் அமர்ந்தும், அதிபரின் படுக்கையில் படுத்தும், நீச்சல் குளத்தில் குளித்தும் அமர்களப்படுத்தினர். அதிபர் மாளிகையில் இருந்து கலை நயமிக்க பொருட்களை சிலர் எடுத்துச் சென்றனர். அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது.
இதே போன்ற காட்சிகள் வங்கதேசத்திலும் அரங்கேறின. பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஞானபாபன் மாளிகையில் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அங்கிருந்த படுக்கையில் படுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் சமையலறைக்கு சென்று அங்கிருந்த உணவுகளை எடுத்து ருசித்தனர். பிரியாணி, குருமா, சிக்கன், மட்டன் என வகை வகையாக இருந்த உணவுகளை ருசி பார்த்தனர். பிரதமர் மாளிகையில் வளர்க்கப்பட்ட வாத்து, ஆடு உள்ளிட்டவற்றை பலர் தூக்கிச் சென்றனர். கலை பொருட்கள், டேபிள், சேர், படுக்கை விரிப்புகள், தலையணைகளை கூட விட்டு வைக்காமல் அள்ளிச் சென்றனர். இலங்கையை போல வங்கதேசத்திலும் பிரதமர் மாளிகை சூறையாடப்பட்டது.
* ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார்
ஷேக் ஹசீனாவின் மகனும், முன்னாள் ஆலோசகருமான சஜீப் வாசேத் ஜாய் லண்டனில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘என் தாய் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார். அவர் நேற்று முன்தினத்தில் இருந்தே ராஜினாமா செய்வது குறித்து யோசித்து வந்தார். குடும்பத்தினர் வற்புறுத்தியதை அடுத்து தனது சொந்த பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். கடின உழைப்பிற்குப் பிறகும் நாட்டின் சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயல்படுவதில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் ஆட்சியை பிடித்த போது வங்கதேசம் ஏழை நாடாக இருந்தது. அதன்பிறகு இன்று வரை வங்கதேசம் வளர்ந்து வரும் நாடாக மாற்றி இருக்கிறார். நாட்டுக்காக பாடுபட்ட பிறகும் இவ்வாறு நடந்திருப்பதால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்’’ என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் பேட்டி அளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, ‘‘சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு வேண்டுமா? என்பதே எனது கேள்வி’’ என்றார். இந்த பேட்டி வெளியான சில மணி நேரத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வங்கதேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹசீனா. பல அரசியல் பிரச்னைகளை சமாளித்த அவர் மாணவர் சக்திக்கு முன்பாக தோற்றுள்ளார். நாடு முழுவதும் அவருக்கு எதிரான எதிர்ப்பு தீவிரமாக இருப்பதால், ஹசீனாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
The post மாணவர் போராட்டம் தீவிரமானதால் ராஜினாமா வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு ஓட்டம்: டெல்லியில் ஷேக் ஹசீனா தஞ்சம்; பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்; ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது appeared first on Dinakaran.