நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து மாணவர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி அண்ணா நகரை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். இவர்களுக்கு பிரியதர்ஷினி (23) என்ற மகளும், ஹேமச்சந்திரன் (20) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பிள்ளைகள் இருவரும் தாயுடன் வசித்துள்ளனர். மகள் பிரியதர்ஷினி தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதேபோல், மகன் ஹேமச்சந்திரன் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயின் விருப்பத்தின்படி 3வது முறையாக நீட் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மிகுந்த மனஅழுத்தத்துடன் இருந்த மகனுக்கு பரிமளமும், பிரியதர்ஷினியும் நீட் தேர்வு குறித்து ஆலோசனை கூறியுள்ளனர். நேற்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்காக படித்துள்ளார். அதன்பிறகே பரிமளம் தூங்க சென்றுள்ளார். பின்னர், காலை 6 மணிக்கு எழுந்து மகன் இருந்த அறைக்கு சென்றபோது, ஹேமச்சந்திரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஹேமச்சந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில், ‘நாம் அனைவரும் ஒரே இடத்தில் வசித்தாலும் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். நான் இதுவரை வாழவே இல்லை. அதனால் வெளியேறி விடுகிறேன். எனது அம்மாவை யாரும் குறை கூற வேண்டாம். இது என்னுடைய முடிவு’ என்று எழுதியிருந்தார்.

தேர்வு அறையில் மயங்கிய மாணவி: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில், தேர்வு 2 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், வேலூரை சேர்ந்த மாணவி தேர்வு அறையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கண்காணிப்பாளரின் தகவலலையடுத்து, வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் அந்த மாணவிக்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய மாணவி மீண்டும் தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர் கண்காணிப்பில் தேர்வு எழுதினார்.

The post நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: