திருமலை: ஆந்திராவில் பல இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலின்போதும் தேர்தல் முடிந்த பிறகும் பல மாவட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சில தலைவர்களும், தொண்டர்களும் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ராம்பாபு கூறியிருந்தார்.
இந்நிலையில், சட்டெனபள்ளி தொகுதிக்கு உட்பட்ட 236, 237, 253, 254 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி அமைச்சர் ராம்பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த மனுவில், தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அதேபோல் சந்திரகிரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வேட்பாளர் செவிரெட்டி மோகித் ரெட்டியும் சந்திரகிரி தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தேர்தல் நடைபெற்று வருவதால் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இதனால் தேர்தல் முடியும் வரை எந்த மனுவும் ஏற்கப்படாது என உத்தரவிட்டு, மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது.
The post ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.