காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து விடும் என்பதால், அதற்குள்ளாக அறுவடையை முடித்து, நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என்று உழவர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு நடந்தால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் தீப ஒளி திருநாள் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், உழவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையில் நெல் கொள்முதலை நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் ஐந்தரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரின்றி வறட்சியால் வாடி விட்டன. ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் போதிய நீர் கிடைக்காததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திலிருந்தும் தப்பிப் பிழைத்த பயிர்கள் இப்போது அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், அவை மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து உள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறதா? என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
The post காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாக தொடங்குக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.