தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் ஆர்வம்… நிதிநுட்ப நகரம்,கோபுரத்திற்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை : நிதிநுட்ப நகரம் மற்றும் கோபுரம் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை நந்தம்பாக்கத்தில் 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த நிதிநுட்ப நகரம் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன வங்கி, காப்பீடு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.56 ஏக்கரில் அமையும் தொழில்நுட்ப நகரத்தில் வணிக குடியிருப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. நிதிநுட்ப நகரத்தில் நீடித்த மற்றும் பசுமை உட்கட்டமைப்புகள், பலவகை போக்குவரத்து இணைப்பு வசதிகளும் அமைக்கப்படுகின்றன. 5.6 லட்சம் சதுர அடியில் நிதி நுட்ப கோபுரத்திக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரம் அமைகிறது.

LEED – பிளாட்டினம் தரமதிப்பீடு பசுமைக் கட்டிடம், 250 இருக்கைகள் கொண்ட கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ. 1,000 முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கோபுரம் அமைக்கப்படுகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால் இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.தமிழ்நாடு முழுவதும் பரவலாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன.நிதி நுட்பம் தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன்களை வளர்த்து முன்னேறுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. தமிழ்நாட்டை நிதி நுட்ப கொள்கை நகரங்களில் முதன்மையானதாக மாற்றுவதற்காக தனிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்படும் நிதிநுட்ப நகரத்தில் இந்திய, சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான வசதி செய்து தரப்படும்.நிதி நுட்ப நகரம் மூலம் ரூ.12,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

The post தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் ஆர்வம்… நிதிநுட்ப நகரம்,கோபுரத்திற்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!! appeared first on Dinakaran.

Related Stories: