வேதத்தை தேடித் தந்த ஸ்ரீமந் நாதமுனிகள்

நாராயணனுக்கு மிகவும் பிடித்தது எது என்றால் கண்களை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம், நாலாயிர திவ்ய பிரபந்தம்தான் என்று. வைணவ கோயில்களில் நடக்கும் உற்சவங்களில் பெருமாள் திருவீதி உலா கண்டருளும் போது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாராயணம் செய்துகொண்டே அடியார்கள் வருவதையும், அந்த பாராயணத்தை கேட்டு ரசித்தபடியே பெருமாள் பின் வருவதையும் நாம் பார்த்திருப்போம்.

ஆழ்வார்கள் பெருமாளின் கல்யாண குணங்களை அனுபவித்து பாசுரம் இட்ட பிரபந்த பாசுரங்களை கண்டெடுத்து கொடுத்த மாபெரும் ஆசார்யர் ஸ்ரீமந் நாத முனிகள்தான்.
ஸ்ரீமந் நாதமுனிகள் இல்லை என்றால் நமக்கு இன்று நாலாயிர திவ்ய பிரபந்தமே கிடைத்திருக்காது. இனிமையான பிரபந்த பாசுரங்களுக்கு இன்னிசை அளித்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தேடித் தொகுத்துத் தந்த அந்த ஸ்ரீமந் நாதமுனிகள், திருஅவதாரம் செய்த வீர நாராயணபுரம் என்றழைக்கப்படும் காட்டுமன்னார் கோயிலில் பிறந்து, பிரபந்தத்தைக் காட்டி கொடுத்த ஆசார்யர் ஸ்ரீமந் நாதமுனிகள். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களுக்குத் தன் சகோதரியின் இரு மகன்களைக் கொண்டு நாதம் சேர்த்த நாதமுனிகளை, நடு நாயகனாக வைத்து இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரை.

ஸ்ரீ லக்‌ஷ்மிநாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே
குருபரம்பராம்”

என்று திருமகள், திருமால் முதற்கொண்டு, நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு, இன்றளவு வரை வழிவழி வந்த அத்தனை ஆசார்யர்களையும் (குருக்களையும்) வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். காட்டுமன்னார் கோயிலில் இருந்த பெருமாளுக்கு சகல விதமான கைங்கர்யங்களையும் செய்து கொண்டிருந்த நாதமுனிகள் இருந்த இடத்தை தேடி, அவர் ஆராதித்து வந்த மன்னனார் பெருமாளை (வீர நாராயண பெருமாள்) தரிசனம் செய்ய மேல்கோட்டையிலிருந்து சில வைணவ பக்தர்கள் வந்தனர். பெருமாளின் திரு முன்பே அவர்கள், நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து, திருக்குடந்தை சாரங்கபாணி பெருமாள்மீது ஆழ்வார் பாடிய பாசுரமான,

“ஆரா அமுதே அடியேன் உடலம்
நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய
உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும்
செழு நீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
கண்டேன் எம்மானே’’
– என்று சொன்ன பிரபந்த பாசுரத்தைக்கேட்டு வியந்து விட்டார் நாதமுனிகள்.

“உழலை என்பின் பேச்சி முலை ஊடு
அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார்
காமர் மானேய் நோக்கியர்க்கே’’

– என்று பாசுரங்களை சொல்லி முடித்தவர்களை பார்த்து ஆஹா இது அல்லவோ மோட்சத்திற்கான வழி. ‘‘ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்” என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்களே. அப்படி என்றால், இந்த பத்துப் பாசுரங்களை தவிர மீதி இருக்கும் பாசுரங்களையும் இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமே என்ற ஆசை நாதமுனிகளுக்குள் எழுந்தது. அந்த தீந்தமிழ் சுவையும், ஈரத்தமிழில் தெரிந்த ஆழ்ந்த பக்தியும் நாதமுனிகளை கட்டிப் போட்டது.

‘‘இப்பிரபந்தம் முழுதும் உங்களுக்கு தெரியுமா?” என்று அவர்களைப் பார்த்து ஆர்வத்தோடு கேட்டார், நாதமுனிகள். “இவ்வளவே நாங்கள் அறிந்தது” என்று சொன்னார்கள் வந்தவர்கள்.” உங்கள் ஊரில் இருப்பவர்கள் வேறு யாருக்காவது மீதம் உள்ள பாசுரங்கள் தெரியுமா?’’ என்று நாதமுனிகள் கேட்க, அதற்கு அவர்களோ, “இல்லை, எங்களுக்கு மட்டும்தான் இந்தளவாவது தெரியும். வேறு யாருக்கும் இதுகூட தெரியாது” என்று சொல்லிவிட்டார்கள்.

அந்த வைணவ அடியார்கள். சரி என்று அவர்களுக்கு பெருமாளின் பிரசாதங்களை கொடுத்து அனுப்பிவிட்டு, அவர்கள் சொல்லிச் சென்ற பாசுரங்களை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தார். பாசுரத்தில் இருந்த, “குருகூர்ச் சடகோபன்” என்ற பதத்தை உள்வாங்கிக் கொண்டு, இப்பாசுரங்களை எழுதியவரின் பேர் சடகோபன் என்றும் அவர் பிறந்த ஊர் திருகுருகூர் என்றும் புரிந்துகொண்டார் நாதமுனிகள். உடனே திருகுருகூர் (ஆழ்வார் திருநகரி) சென்று, அங்கே இருந்த மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யரான ஸ்ரீ பராங்குச தாசரிடம் சென்று, ‘‘இவ்விடத்தில் திருவாய்மொழியைப் பாராயணம் செய்பவர்களோ அல்லது திருவாய்மொழி பாசுரங்களின் ஓலைகளோ இருக்கிறதா?” என்று கேட்க, “சடகோபன் என்கிற நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது.

ஆனால் என் ஆசார்யரான, மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் மீது பாடிய பதினோரு பாசுரங்கள் கொண்ட “கண்ணிநுண் சிறுதாம்பு” மட்டுமே அடியேன் அறிவேன். எம் ஆசார்யன் யாரோ ஒரு மஹானுபவர் திருவாய்மொழியை தேடிக் கொண்டு வருவார். அவரிடம் திருவாய்மொழி கிடைக்க, திருபுளிய மரத்தின் அடியில் இருந்துகொண்டு 12,000 முறை இந்த கண்ணிநுண்சிறுதாம்பை சொல்லி வந்தால் நம்மாழ்வார் அவர் முன் தோன்றி அவர்கள் கேட்கும் பொக்கிஷத்தை கொடுத்து விடுவார்.

இது என் ஆசார்யரின் வாக்கு” என்று சொல்ல, உடனே நாதமுனிகள் அங்கிருந்த தாமிரபரணி நீரில் நீராடி பரம பக்தி ச்ரத்தையோடு பராங்குச தாசரிடமிருந்து கண்ணிநுண்சிறுதாம்பை பயின்று, அதை செவ்வனே திருபுளிய மரத்தின் அடியில் சொல்லி வர, அவரின் பக்திக்கு பரிசாய் நம்மாழ்வார் மீண்டும் தோன்றி நாதமுனிகள் முன் கொடுத்த பெருஞ்செல்வம்தான் மஹா வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம்.

நளினி சம்பத்குமார்

The post வேதத்தை தேடித் தந்த ஸ்ரீமந் நாதமுனிகள் appeared first on Dinakaran.

Related Stories: