ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவரின் உடல் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மீட்கப்பட்டு திரும்பிய 2 மீனவர்கள் அளித்த பேட்டியில், இந்திய எல்லையில் மீன் பிடித்தபோதே இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதாக தெரிவித்தனர். மாயமான மீனவரை மீட்கக்கோரி மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் நேற்று துவங்கியது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது, இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி மீனவர் மலைச்சாமியை கொலை செய்தது.
உடன் சென்ற மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி ஆகியோர் கடலில் தத்தளித்தபோது இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர். மாயமான மீனவர் ராமச்சந்திரனை 3வது நாளாக தொடர்ந்து தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 2 பேருடன், மலைச்சாமியின் உடல் இலங்கை கடற்படை கப்பலில் இருந்து, இந்திய கடல் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய கடற்படை அதிகாரிகள் கடல் எல்லையில் உடலை பெற்றுக் கொண்டு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வந்திறங்கினர்.
உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் மாந்தோப்பு பகுதியில் அவரது வீட்டில் குடும்பத்தினரிடம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி, வட்டாட்சியர் செல்லப்பா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய இருவரையும், இந்திய கடற்படை அதிகாரிகள் மீன்பிடி துறைமுகம் அருகே கடற்படை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மீனவர் மலைச்சாமியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மீனவர் மூக்கையா கூறுகையில், ‘‘இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் எங்களின் படகில் மோதி மூழ்கடித்தது. மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மூழ்கி தத்தளித்தோம். இருவரை முதலில் மீட்டனர். அடுத்து மீட்கப்பட்ட மீனவர் மலைச்சாமி தாக்குதல் நடந்த அதிர்ச்சியில் இறந்து விட்டார். இலங்கை கடற்படை எங்களை ரோந்து படகில் ஏற்றி கொண்டு, மாயமான மீனவர் ராமச்சந்திரனை பல மணி நேரம் தேடியது. உடல் கிடைக்காததால் கரைக்கு அழைத்துச் சென்றனர்’’ என்றார். மாயமான மீனவர் ராமச்சந்திரனை இதுவரை மீட்காததால், ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மீனவர் குறித்த எந்த தகவலும் இல்லாததால், இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் சக மீனவர்கள் மீன்வளத் துறையின் அனுமதி பெற்று தேடிச் செல்ல உள்ளனர்.
* புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த வீரனுக்கு சொந்தமான விசைப்படகில் அவரது மகன் சரண் (24), பாலா(29), கணேசன்(32), பரமசிவம்(51) ஆகிய 4 பேர் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது நெடுந்தீவு அருகே நேற்று மாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
The post இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவரின் உடல் தகனம் மீனவர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம் : இந்திய எல்லைக்கே வந்து கப்பலால் மோதினர்; மீட்கப்பட்டு திரும்பிய மீனவர்கள் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.