விளையாட்டில் சாதனை படைத்த வீரர்களுக்கு ரூ.100 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

போட்டியை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் துவக்கி வைத்தார். சென்னை, கோவை, திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடியது.நேற்று நடந்த இறுதி போட்டியை துவக்கி வைத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டு வீரர்கள் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றால் ரூ.3 கோடி, வெள்ளி பதக்கத்துக்கு ரூ.2 கோடி, வெண்கல பதக்கத்துக்கு ரூ.1 கோடியை தமிழக அரசு பரிசாக வழங்குகிறது.

அதேபோல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் ஊக்கத்தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.100 கோடி பரிசுத்தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது என்றார்.

The post விளையாட்டில் சாதனை படைத்த வீரர்களுக்கு ரூ.100 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: