×

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

உளுந்தூர்பேட்டை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சிறப்பு நிதி வழங்குவதோடு, கூடுதல் நிதிப்பகிர்வும் அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நடந்த மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் நற்சோனை வரவேற்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், அய்யா வைகுண்டர் இயக்க தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்எல்ஏ, ரவிக்குமார் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் ஆனி ராஜா, காங்கிரஸ் எம்பி சுதா, மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொகையா ஷேக்முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில செயலாளர் பாத்திமா முசபா, மனிதநேய மக்கள் கட்சி மகளிரணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்த மாநாட்டில் திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்வதை நாம் பாராட்ட வேண்டாமா. அவர்களுக்கும் இந்த கொள்கையில் உடன்பாடு உள்ளது. காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா மதுவிலக்கு கொண்டு வந்தார். அதில் எவ்வளவு இழப்பு என்றாலும் பரவாயில்லை என கூறினார். 1974ல் மதுக்கடைகளை மூடியவர் கலைஞர். தேசிய அளவில் மது கொள்கை வேண்டும், என கூறினார். அதன் பிறகு டாஸ்மாக் கடையை திறந்தவர் யார், இந்த டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கிய அரசு யார். எம்ஜிஆர் காலத்தில் மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் மதுக்கடைகள் அரசுடமை ஆக்கப்பட்டது. அதன் பின் தற்போது ஸ்டாலின் அரசு வந்துள்ளது. நான் முதல்வரை சந்தித்த போது நானும் இதற்கு உடன்படுகிறேன் என கூறினார். மதுக்கடைகளை மூடினால் 2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

ஒரு வேலை தேர்தல் அரசியல் தவிர்க்கும் இயக்கமாகவும் மாறுவேன். என் கை சுத்தமாக உள்ளது. கொள்கையில் உறுதியாக இருப்பேன். 1947ல் ராஜாஜி நகராட்சி தலைவராக இருந்த போது வெள்ளைக்காரன் மதுக்கடைகளை திறக்க சொன்ன போது மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என உறுதியாக கூறியவர், அதை நடைமுறைப்படுத்தினார், அதனால் தான் மாநாட்டில் ராஜாஜிக்கு கட் அவுட் வைத்தோம், மாநாடு தீர்மானங்களை அப்படியே தமிழக முதல்வர் நடைமுறை படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். குடியால் அனைத்து சமுதாய மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிராமம் தோறும் மதுவிலக்கு மகளிர் குழு உருவாக்க போகிறோம். இவ்வாறு அவர் பேசினார் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 47ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசிய கொள்கையாக வரையறுக்கவும், சட்டம் இயற்றவும் வேண்டும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதோடு, கூடுதல் நிதிப்பகிர்வும் அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். தமிழக்கத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். குடி நோயாளிகளுக்கும், போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்குவதோடு, மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். தமிழக சட்டசபையில் சிறப்பு மற்றும் கூடுதல் நிதிக்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Vishik Women's Conference ,Union ,Ulundurpet ,and drug eradication ,Liberation Tigers Party.… ,Dinakaran ,
× RELATED தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற...