கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப்பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022- 23 அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 இலட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. மேலும் சர்க்கரைக் கட்டுமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவைப் பருவத்தில் 9.27 சதவிகிதமாக
உயர்ந்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் 2023-24 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
ஒன்றிய அரசு 2022-23 ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ.2821.25/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணையிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு சர்க்கரைத்துறை ஆணையரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.253.70 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.