தென் மாநிலங்களின் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது: ஒன்றிய நீர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அணைகளில் நீர் இருப்பு முந்தைய ஆண்டுகளை விட கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. ஒன்றிய நீர் ஆணையம் நாட்டில் உள்ள முக்கிய அணைகளின் நீர் இருப்பு குறித்த வாராந்திர புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில்,இந்தியாவில் உள்ள 150 முக்கிய அணைகளின் மொத்த சேமிப்பு திறன் 257.812 பில்லியன் கனமீட்டர். தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்த அணைகளில் தற்போது 64.606 பில்லியன் கனமீட்டர் நீர் இருப்பு உள்ளது. இது மொத்த சேமிப்பில் 36 சதவீதம்.

வட மண்டலத்தில் உள்ள இமாச்சல் பிரதேசம்,பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அணைகளில் மொத்த சேமிப்பு திறனில் 32 சதவீதம் நீர் உள்ளது. அதன்படி அணைகளில் மொத்தம் 6.290 பில்லியன் கனமீட்டர் நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு மற்றும் 10 ஆண்டுகளில் இருந்த சராசரியை விட மிக குறைவாகும். தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் முந்தைய ஆண்டுகளை விட கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அணைகளில் தற்போது உள்ள நீர் இருப்பு 10 ஆண்டுகளில் இருந்த சராசரியை விட கணிசமாக குறைந்துள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பருவமழை குறைந்தது மற்றும் ஏரிகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டது தான் பெங்களுருவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு காரணம் என தெரியவருகிறது. கிழக்கு மண்டலத்தில் உள்ள அசாம்,ஜார்க்கண்ட்,ஒடிசாவில் முந்தைய ஆண்டுகளை விட நீர் சேமிப்பு திறன் 47.49 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள குஜராத்,மகாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளில் நீர் இருப்பு குறைந்தது. ஆனால் தற்போது நீர் இருப்பு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. உபி மற்றும் மபி மாநிலங்களில் தற்போது நீர் இருப்பு 44 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென் மாநிலங்களின் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது: ஒன்றிய நீர் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: