சென்னை: தெற்காசியாவில் முதன்முறையாக பார்முலா 4 இரவு நேர ஸ்டிரீட் கார் பந்தயத்தை சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 6 அணிகள் பங்கேற்கும் பந்தயத்தில் இன்று முதன்மை சுற்று நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன்ஸ் நிறுவனம் (ஆர்பிபிஎல்) இணைந்து நடத்தும் ‘இந்தியன் ரேசிங் லீக்-எப்4’ எனப்படும் இந்த இரவு நேர தெரு கார் பந்தயம், தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடப்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்தனர். கட்டணமின்றி பார்ப்பதற்காக முறைப்படி பதிவு செய்த பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
சர்வதேச விளையாட்டு மையமாக மாறி வரும் சென்னையில், இந்தியன் ரேசிங் லீக் எப்-4 கார் பந்தயம் நடப்பது அதன் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக முத்திரை பதித்துள்ளது. போட்டி நடைபெறும் 3.5 கி.மீ. தொலைவு சாலையை சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சியுடன் தொடங்குவதாக இருந்தது. சர்வதேச மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின் (எப்ஐஏ) ஒப்புதல் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானதால், திட்டமிட்டபடி பயிற்சிப் பந்தயங்கள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி நேற்று நண்பகல் 12 மணிக்குள் ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டி இருந்தது.
எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக எப்ஐஏ அதிகாரிகளின் ஆய்வுப் பணி பாதிக்கப்பட்டதால், ஒப்புதல் சான்றிதழ் பெறுவதில் தாமதமானது. அதனால் நீதிமன்றத்தை அணுகி ஒப்புதல் சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, எஸ்டிஏடி, ஆர்பிபிஎல் தரப்பில் நீதிமன்றத்தை அணுகினர். முதல் நாளில் பயிற்சி சுற்று மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஒப்புதல் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, சர்வதேச மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரிவினர் பந்தய பாதையை மீண்டும் ஆய்வு செய்தனர்.
அதில் திருப்தியடைந்ததை அடுத்து எப்ஐஏ பாதுகாப்பு அதிகாரி கிளமன்ட் லூட் ‘கையொப்பம்’ இட்டு அனுமதி சான்றிதழை வழங்கினார். அதனை இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு (எப்எம்எஸ்சிஐ) தலைவர் அக்பர் இப்ராகிம் உறுதி செய்தார். அதை தொடர்ந்து தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் பார்முலா-4 இரவு நேர ஸ்டிரீட் கார் பந்தயத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ரேசிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் (ஆர்பிபிஎல்) தலைவர் அகிலேஷ் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பிறகு பந்தயத்தில் பங்கேற்கும் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏஸ் ஜேஏ ரேசிங், பெங்களூரு ஸ்பீட்ஸ்டர்ஸ், ஐதராபாத் பிளாக்பேர்ட்ஸ் , ஸ்பீடு டெமன்ஸ் டெல்லி, ரார் பெங்கால் டைகர்ஸ் என 6 அணிகளின் வீரர், வீராங்கனைகளும் பயிற்சியில் ஈடுபட்டனர். அதில் ஜேகே பிளாக் எப்-4, எப்-4 இந்தியன், ஐஆர்எல்-டிரைவர் ஆகிய பிரிவுகளில் தலா 2 சுற்றுகளாக பந்தய கார்களை ஓட்டி பயிற்சி செய்தனர். இரவு 11 மணி வரை நீடித்த பயிற்சி பந்தயங்களை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இடையில் பார்வையாளர்களை மகிழ்விக்க பந்தய கார்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. எப்-4, இந்தியா எப்-4 பிரிவின் தகுதிச்சுற்று மற்றும் முதன்மை சுற்று பந்தயங்கள் இன்று நடைபெற உள்ளது.
* ‘விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தனி இடம் கிடைக்கும்’
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற பார்முலா 4 சென்னை ஸ்டீர் ரேஸிங் கார் பந்தயத்தை, சென்னைத் தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தோம். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகிற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள், கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம். முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி என கூறியுள்ளார்.
The post தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் கார் பந்தயம் தொடங்கியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்; இன்று முதன்மை சுற்று appeared first on Dinakaran.