சரிவை சந்தித்து வந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம்

சென்னை: அதிரடியாக சரிவை சந்தித்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிரடியாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 17ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு 18ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.55,240க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் தாக்கலான அன்றே தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 24ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கும், 25ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும், 26ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்கப்பட்டது.

அதே நேரத்தில் கடந்த 18ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,920 குறைந்தது. இந்த விலை குறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிறைய பேர் நகை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த 23ம் தேதி முதல் நகைக்கடைகளில் நகை வாங்க கூட்டம் அலைமோதியது. விலை குறைவால் வழக்கத்தை விட 20 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்ததாக நகை வியாபாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,465க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.51,720க்கு விற்கப்பட்டது.

The post சரிவை சந்தித்து வந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: