சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரம் : 4 பேர் கைது; ஆதரவற்ற மாணவிக்கு உதவி; அமைச்சர் கணேசன் நேரில் ஆறுதல்!!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு, விற்பனை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (43). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் பகுதியில் உள்ளது. இந்த ஆலையின் நுழைவு பகுதியில் சுந்தரமூர்த்திக்கு சொந்தமான பட்டாசு கடை, மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. நேற்று பிற்பகல் வெளியூரை சேர்ந்தவர்கள் கடையில் பட்டாசு வாங்க வந்தனர். பேன்சி ரக பட்டாசுகளை கடையின் அருகே வைத்து வெடித்து பார்த்தனர். அப்போது வெடித்து சிதறிய சில பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக கடைக்குள் விழுந்தன. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து நாலாபுறமும் வெடித்துச் சிதறின. இதனால் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியே புகைமண்டலமாக மாறியது. இந்த விபத்தில் 13 பேர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ரெங்கபாளையம் பட்டாசு கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம் குமார் ஆகிய 3 பேரை எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆலையில் விபத்து: இதேபோல் சிவகாசி – விருதுநகர் சாலை திருத்தங்கல்பட்டி தெருவை சேர்ந்த முத்துவிஜயனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை கிச்சநாயக்கன்பட்டியில் உள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு அறையில் திடீரென மருந்து உராய்வு ஏற்பட்டு வெடித்தது. இதில் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேற்பார்வையாளரை மாறனேரி போலீசார் கைது செய்துள்ள நிலையில், முத்து விஜயன் தலைமறைவாகி உள்ளார். கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் கணேசன் பேட்டி..

விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். காயம் அடைந்த ஒரு பெண்ணையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர், தந்தை இல்லாத மாணவி சந்தியா என்பவர் தனது தாய் முனீஸ்வரியையும் விபத்தில் இழந்து ஆதரவற்று இருக்கும் நிலையில், அவரது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் 2 நாட்களில் அவருக்கு வீட்டு, மனை பட்டா வழங்கப்படும் என்றும் கணேசன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கணேசன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், இன்று நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் இந்த விபத்து தொடர்பாகவும் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி விபத்துகளை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனிடையே விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

The post சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரம் : 4 பேர் கைது; ஆதரவற்ற மாணவிக்கு உதவி; அமைச்சர் கணேசன் நேரில் ஆறுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: