சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

பெரியபாளையம்: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலில் நடைபெற்ற 108 பால்குடம் ஊர்வல விழாவில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து ஆறு வாரம் நெய்தீபம் ஏற்றி, முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கம் சார்பில் கிராம மக்கள் காவடி எடுத்தும், பெண்கள் 108 பால்குடம் தலையில் சுமந்தும் ஊர்வலமாக வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து முருக பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார். ஊத்துக்கோட்டை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பெரியபாளையம் கிராமத்தில் திட்டியம்மன் கோயிலில் 108 பால்குடம் பாலாபிஷேகம் விழாவில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ பார்வதி தேவி திட்டியம்மன் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 108 பால்குடம் பாலாபிஷேகம் விழா விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பெரியபாளையம் கங்கையம்மன் கோயில் அருகிலிருந்து 108 பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து திட்டியம்மன் கோயிலை அடைந்தனர். இதனையடுத்து, திட்டியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில், திட்டடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள், தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் நகர் மற்றும் கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அதேபோல் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள ஓம் மகா மாயா சக்தி கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 பால்குட அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது . வடசென்னை அனல் மின் நிலையம் அருகில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் இருந்து பால் குட ஊர்வலம் புறப்பட்டு துறைமுக சாலை வழியாக அத்திப்பட்டு புது நகரை வந்தடைந்து அங்குள்ள ஓம் மகா மாய சக்தி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது‌ பால்குட ஊர்வலத்தில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: