The post சிக்கிம் வெள்ளம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: மாயமான ராணுவத்தினரில் 7 வீரர்களின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.
சிக்கிம் வெள்ளம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: மாயமான ராணுவத்தினரில் 7 வீரர்களின் சடலம் மீட்பு

கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 103 பேர் மாயமாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலம், சிக்கிமில், கடந்த புதனன்று ஏற்பட்ட மேக வெடிப்பினால் தெற்கு லோனாக் ஏரியின் கரை உடைந்து அதில் இருந்த தண்ணீர் சங்க்தாங் அணைக்கு பாய்ந்தது. அணை நிரம்பி வழிந்ததில் டீஸ்டா நதியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் சங்க்தாங், பார்டெங் ஆகிய நகரங்கள் மற்றும் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 2,411 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாங்கன் மாவட்டத்தில் 8 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன என பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ள பெருக்கு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்,ராணுவ வீரர்கள் நேற்று மூன்றாவது நாளாக கூட்டாக மீட்பு பணியை மேற்கொண்டனர். மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், ‘‘ வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆனது. 15 வீரர்கள் உட்பட 103 பேர் மாயமாகியுள்ளனர். பார்டங்க் பகுதியில் 23 ராணுவ வீரர்களை காணவில்லை. உயிரிழந்தவர்களின் 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’’ என்றார்.