×

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா; என் தாய் பிரதமர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை: நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவரது மகன் பகீர் பேட்டி

வாஷிங்டன்: என் தாய் பிரதமர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று, வாஷிங்டனில் இருந்து அவரது மகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காமல் போன வன்முறையால், அவாமி லீக் தலைவரான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் தொடர்ச்சியாக வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வசேத் ஜாய், வாஷிங்டனில் இருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘என் தாய் அவரது பிரதமர் பதவியை இன்னும் முறையாக ராஜினாமா செய்யவில்லை. காரணம் அவருக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லை. தனது ராஜினாமா கடிதத்தை அறிக்கையுடன் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை நோக்கி பெரும் திரளாக வந்தனர். அதனால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுவிட்டார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் இன்னும் வங்கதேசத்தின் பிரதமராக இருக்கிறார்.பிரதமர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்யாததால், இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக அவரால் நீதிமன்றத்தில் முறையிட முடியும். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் பதவிக்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மீண்டும் அவாமி லீக் கட்சி ஆட்சிக்கு வரும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாகி விடுவோம். கடந்த காலத்தை மறந்து விடுவோம். பழிவாங்கும் அரசியல் செய்யக்கூடாது. வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிஎன்பி கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

அவாமி லீக் கட்சியின் சார்பில், அடுத்த தேர்தலில் என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சியினர் கூறுகின்றனர். எனது தாயின் பதவிக் காலம் முடியும்போதே, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார். கட்சி விரும்பினால், நான் தேர்தலில் போட்டியிடுவேன். என் தாயை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அவர்களின் மிரட்லுக்கு என் தாய் பயப்படவில்லை. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்தோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்துவிட்டோம். விரைவில் நாடு திரும்புவோம். எங்களை யாராலும் அழிக்க முடியாது. எங்கள் உதவி மற்றும் ஆதரவாளர்கள் இல்லாமல், வங்கதேசத்தில் நிலையான ஆட்சி அமையாது’ என்றார்.

 

The post வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா; என் தாய் பிரதமர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை: நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவரது மகன் பகீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,India ,Bangladesh ,Bakir ,Washington ,Awami League ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...