அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியீடு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி உத்தரவை நிறுத்தி வைத்ததாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையானது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி 5 மணி நேரத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் சட்ட ஆலோசனையை நாடியுள்ளேன். செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கவுள்ளேன். மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்டப்படி சந்திப்போம் என்று முதலமைச்சர் எச்சரித்திருந்த நிலையில் முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவித்திருந்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜியின் நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தற்போது ஆளுநர் விளக்கம் அளித்திருக்கிறார்.

கடிதத்தின் முழு விவரம்;

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்த முதல்வரின் பதில் ஏமாற்றம் தருகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனது அறிவுரையை மீறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. செந்தில்பாலாஜி கைதானது குறித்து நீங்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது பற்றி நான் விளக்கம் கேட்டும் பதில் தரவில்லை. விளக்கம்தராமல் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள்.

ஜூன் 1 மற்றும் ஜூன் 16 ஆகிய நாட்களில் விரும்பத்தகாத சொற்களை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள். விரும்பத்தகாத மற்றும் வரம்புமீறிய சொற்களை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள் என்று தெரிவித்துள்ளார். கடிதத்தில் உச்சநீதிமன்றம் செந்தில்பாலாஜி குறித்து கூறிய கருத்துகளை ஆளுநர் மேற்கோள் காட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு:

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி முன்னதாக ஆளுநர் உத்தரவிட்டார். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் அறிவித்ததால் தமிழக அரசியலில் அதிர்வலை ஏற்பட்டது. ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநரின் செயல், சட்டப்படி செல்லத்தக்கதல்ல என சட்ட வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான ஆளுநரின் உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்றி அரசின் நிர்வாக நடைமுறைகளில் ஆளுநர் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டப்படி செல்லுமா என சந்தேகம் எழுந்ததால் அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரவை நிறுத்திவைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: