செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு ஆளுநருக்கு ஐகோர்ட் உத்தரவிட முடியுமா?: மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி

* விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமான தீர்ப்புகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29ம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர் அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா, இது தொடர்பாக தீர்ப்பு ஏதேனும் உள்ளதா, அவற்றை தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

அப்போது, செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது, அதன் மூலம் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். அதற்கு தலைமை நீதிபதி, அவர் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பதவியில் இருக்கிறாரே என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இதேபோல, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு ஆளுநருக்கு ஐகோர்ட் உத்தரவிட முடியுமா?: மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: