சென்னை: செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதி மீறல் நடந்ததுள்ளது. அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரின் நீண்ட வாதங்களுக்கு பின்னர் இரு நீதிபதிகளும் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தனர்.
நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை. அவர் உடல் நிலை குணமானவுடன் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம் என்று கூறப்பட்டிருந்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இறுதி முடிவை எடுக்க இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்ற இந்த தீர்ப்புகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். சனிக்கிழமை என்றால் நாங்களும் தயார்” என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். வழக்கை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த என்.ஆர்.இளங்கோ; எங்களின் விருப்பமும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் என கூறினார். வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் தெரிவித்து வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.
The post செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் appeared first on Dinakaran.