அறந்தாங்கி: செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கோட்டையில் மாலை 4.15மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் இரவு 9.58மணிக்கு அறந்தாங்கி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில் நேற்று மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் புறப்படும்போதே எம்-5 ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை.
இந்த பெட்டியில் 70 பயணிகள் இருந்தனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கூறியபோது அடுத்த ரயில் நிலையத்தில் சரி செய்யப்படும் என கூறியுள்ளனர். அப்படியே அடுத்தடுத்த ரயில் நிலையங்களை ரயில் கடந்து வந்துள்ளது. இதன் இடையே அந்த எம் 5 பெட்டியில் இருந்த ஏசி வேலை செய்யாததால் 70 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் அந்த ரயில் அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு வந்தபோது பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அப்போது பயணிகள் அதிகாரிகளிடம் ஏசியை உடனே சரி செய்து, அதன் பின்னர் ரயிலை இயக்குங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள் ரயில் பெட்டியில் ஏசி சரி செய்யும் வசதி அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இல்லை. திருவாரூர் ரயில் நிலையத்தில் கண்டிப்பாக ஏசி சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறி சென்றனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரயில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நின்று காலதாமதமாக சென்றது.
The post செங்கோட்டை-தாம்பரம் ரயிலில் ஏசி பழுதால் 70 பயணிகளுக்கு வாந்தி,மயக்கம்: அபாய சங்கிலியை இழுத்து நள்ளிரவில் போராட்டம் appeared first on Dinakaran.