பத்திரப்பதிவுத்துறையில் புதிய சாதனை நடப்பாண்டு ஜூலை வரை ரூ.5,611 கோடி வசூல்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல்

சென்னை: கடந்தாண்டை விட நடப்பாண்டு ஜூலை மாதம் வரை மொத்த வருவாய் ரூ.5611.47 கோடி வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவாக இத்துறையின் மூலம் அரசுக்கு வரும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான பதிவு வசதிகளை மேம்படுத்துதல், போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி பொதுமக்களுக்கு துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் மற்றும் வருமான சிதறல்களை ஒழுங்குபடுத்தி அரசின் கருவூலத்திற்கு வர வேண்டிய இனங்களை விடுதல் இன்றி வர வைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக பத்திர பதிவுத்துறை வருவாய் வசூலில் தொடர்நது முன்னேற்றம் கண்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.17,253 கோடி வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. கடந்தாண்டில் ஜூலை மாத முடிவு வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயைவிட நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் முடிவில் அதிக வருவாய் வசூலிக்கப்பட்டு பதிவுத்துறை நடப்பு நிதியாண்டிலும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, கடந்த நிதி ஆண்டில் 2022 ஜூலை 31ம் தேதி வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.5539.06 கோடியாகும். ஆனால் தற்போதைய நடப்பு ஆண்டின் 2023 ஜூலை 31ம் தேதி வரை பத்திரப்பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.5611.47 கோடியாகும். அந்தவகையில், வரலாற்று சாதனை படைக்கப்பட்டதாக கருத்தப்பட்ட கடந்தாண்டு சாதனையை காட்டிலும் நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை பத்திரப் பதிவுத்துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பத்திரப்பதிவுத்துறையில் புதிய சாதனை நடப்பாண்டு ஜூலை வரை ரூ.5,611 கோடி வசூல்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: