மும்பை: புனேயில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அஜித் பவாரும் சரத் பவாரும் சந்தித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜவுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை என சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்றுமுன்தினம் இரவு புனேயில் ரகசியமாக சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் வந்து சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், சரத் பவாரை சந்திப்பது இது முதல் முறை அல்ல.
ஆனால், இந்த முறை ரகசியமாக சந்தித்தது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை உடைக்க பாஜ மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த சந்திப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் சங்கோலாவில், மறைந்த எம்.எல்.ஏ. கண்பத்ராவ் தேஷ்முக்கின் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதாவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்நவிசுடன் சரத்பவார் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சரத் பவார் கூறியதாவது:
சில நலன் விரும்பிகள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருமாறு என்னை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பாரதிய ஜனதாவுடன் நான் ஒரு போதும் சேரமாட்டேன். பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் அணியை சேர்ந்த சிலர் (அஜித் பவாரும் மற்றவர்களும்) வேறு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் எங்கள் தேசியவாத காங்கிரஸ் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேராது. பாரதிய ஜனதாவுடன் சேருவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியல் கொள்கைக்கு பொருந்தாது. துணை முதல்வர் அஜித் பவார் என் அண்ணன் மகன்தான். அஜித் பவாரை நான் சந்தித்தது பற்றி கேட்கிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்திப்பது புதிதல்ல.
மகாராஷ்டிராவில் அடுத்து நடைபெறும் தேர்தலில், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியிடம் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார். இதனிடையே, சரத்பவார் – அஜித்பவார் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா உத்தவ் ஆதரவு எம்பி சஞ்சய் ராவத், ‘‘நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் மோடியும் சந்திக்க முடியுமென்றால், சரத்பவாரும் அஜித்பவாரும் ஏன் சந்திக்கக் கூடாது?. மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கே திரும்பி வந்து விடுமாறு அஜித்பவாரிடம் சரத்பவார் வலியுறுத்தியிருக்கலாம்’’ என்றார்.
The post அஜித்பவாருடன் ரகசிய சந்திப்பு விவகாரம் பாஜ கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்டம் appeared first on Dinakaran.