வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு மேலும் 23 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடெல்லி: காவிரியில் இருந்து மேலும் 23 நாட்கள் வினாடிக்கு 2,600 கனஅடி என்ற வீதம் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு நேற்று ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் காவிரி தொழில்நூட்ப தலைவர் சுப்ரமணியன் மற்றும் தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தியதில், ‘‘எங்களது மாநிலத்தில் இருக்கும் வறட்சி நிலையை அடிப்படையாக கொண்டு காவியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீரை திறக்க கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும். அதேப்போன்று நிலுவை நீரையும் காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அதிகாரிகள், எங்களது மாநில நீர் தேக்க அணைகளில் போதிய தண்ணீர் கிடையாது என்பதால், தமிழ்நாட்டுக்கு எங்களால் தண்ணீர் திறக்க முடியாது என தெரிவித்தனர்.

இதேப்போன்று கேரளா மற்றும் புதுவை மாநில அதிகாரிகளும் அவர்களது மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை ஒழுங்காற்று குழு முன்னிலையில் தெரிவித்தனர். அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா,‘‘காவிரியில் நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2600 கன அடி என்ற வீதம் கர்நாடகா தண்ணீரை திறந்து விட வேண்டும். இது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும் என்றார்.

The post வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு மேலும் 23 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: ஒழுங்காற்று குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: