×

சீசன் துவங்கியும் தண்ணீர் இன்றி சரணாலயத்திற்கு வராத பறவைகள்

*ஏமாற்றத்தில் கிராமமக்கள்

ராமநாதபுரம் : சரணாலயம் அமைந்துள்ள கண்மாய்களில் மழைநீர் இல்லாததால் சீசன் தொடங்கியும், இந்தாண்டு இன்னும் பறவைகள் வராததால் கிராமமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் கண்மாய்கள், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாய், கீழகாஞ்சிரங்குளம் கண்மாய், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கண்மாய், ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் மற்றும் தேர்த்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு தோறும் பருவ மழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாட்டுகளில் இருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வருவது வழக்கம். குறிப்பாக தாழைக் கொத்தி, செங்கல் நாரை, நத்தை கொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோ வால்பவர், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட 50 வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வரும். இதுபோன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, தொண்டி காரங்காடு அலையாத்தி காடு, வாலிநோக்கம் கடல் தரவை மற்றும் கடல்தீவு பகுதிகளில் நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல் திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் வருவது வழக்கம்.

இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள், கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் பல மைல் தூரம் கடல் கடந்து பறந்து வருவது வழக்கம். இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டு கருவேல மரங்கள் உள்ளிட்ட மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லும்.

இந்நிலையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையும் மழைக்காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறவைகள் வந்தது. பறவைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக சப்தம் தரக்கூடிய பட்டாசுகளை கிராம மக்கள் வெடிக்காமல் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் கண்மாய்களில் தண்ணீர் பெருகி ஓரளவு நிறைந்தது. இதனால் சரணாலயம் பகுதிகளில் சுமார் 40 வகைக்கும் மேலான பறவைகளும், தீவு பகுதிகளில் சுமார் 75ஆயிரம் பறவைகள் வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு பருவமழை தற்போது பெய்து வருகிறது. ஆனால் கண்மாய்களில் தண்ணீர் முழுமையாக நிறையவில்லை. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் வரவில்லை. இதனால் கிராமமக்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.இதுகுறித்து சித்திங்குடி கிராமமக்கள் கூறும்போது, ராமங்களுக்கு விருந்தாளிகள் போல் வந்து ஆரவாரத்துடன், வட்டமிட்டு இங்கும், அங்கும் பறந்து மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் இருக்கும். பறவைகளுக்காக பல வருடங்களாக தீபாவளிக்கு சப்தம் தரக்கூடிய பட்டாசுகளை வெடிப்பது கிடையாது.

ஒளி மட்டும் தரக்கூடிய பட்டாசுகளை சிறுவர்கள் வெடித்து வருகின்றனர். இப்படி ரம்மீயமான சூழ்நிலை தரும் பறவைகள், இந்தாண்டு தீபாவளி முடிந்தும் கூட இன்னும் வராதது வருத்தமளிக்கிறது.இருந்தபோதிலும் தேசிய பறவையான மயில் மற்றும் அனைத்து காலங்களிலும் கிராம பகுதியில் இருக்கும் கவுதாரி, குயில், ஆந்தை, பருந்து, செம்புவத்தி, புறா, கொக்கு, நாரை வகை பறவைகளுக்காக திருமணம், இறப்பு நிகழ்ச்சிக்கு கூட அதிக சப்த்தம் தரக்கூடிய பட்டாசுகளை வெடிப்பது கிடையாது என்றனர்.

The post சீசன் துவங்கியும் தண்ணீர் இன்றி சரணாலயத்திற்கு வராத பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Mechelvanur ,Keezhchelvanur ,Kudaladi ,Chitrangudi Kanmai ,Mudukulathur ,Geezakanchirangulam ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த...