தமிழக மீனவர்களின் படகுகளைப் பறித்துக்கொள்வது, வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் ஈவிரக்கமற்ற வன்முறை தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடேயாகும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளதோடு, 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும், இலங்கை ராணுவத்தின் இக்கோரத் தாக்குதல்களுக்கு இதுவரை இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எவ்வித எதிர்வினையும் ஆற்றியதுமில்லை. பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கினாலேயே தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 27 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி கட்சத்தீவினை மீட்க உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.