செவ்வாய் ஆட்சி + சந்திரன் நீசம்
செவ்வாயின் ஆதிபத்தியத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், இந்த ராசியில் சந்திரன் நீசம் அடைவதால், இவர்கள் மனதுக்குள் ஒருவித பயம், சந்தேகம், சஞ்சலம் இருந்துகொண்டிருக்கும். இதனால், இவர்கள் உள்முக நோக்குடையவர்களாக (இன்ட்ரோவெர்ட்ஸ்) இருப்பார்கள். செவ்வாய் உடல், சந்திரன் மனம் என்பதால் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போலத் திடீரென்று செவ்வாயின் ஆதிபத்தியம் மேலோங்கும் வேளைகளில் இவர்களின் மனமும் கொந்தளிக்கும். அச்சமயம், அநியாயம் அக்கிரமங்களைக் கண்டால் அடித்து உடைத்து நொறுக்கி எடுத்து அந்த இடத்தையே கந்தர கோலமாக்கி விடுவார்கள். இவர்கள் பார்க்க பசு போல இருக்கும் குழந்தைகள்தான். திடீரென்று ஆவேசம் வந்து அநியாயங்களை எதிர்த்து கேட்கும்போது பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று நினைக்க வைத்துவிடுவார்கள்.
ஆத்ம நேசர்கள்
விருச்சிக ராசிக் குழந்தைகள் தங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் ஆகியோரை ஆத்மார்த்தமாக நேசிப்பார்கள், மதிப்பார்கள். ஒரு சிறு விஷயத்தில் அவர்கள் நேர்மை இல்லாமல் நடந்து கொண்டால்கூட பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்கூட பேசாமல் இருந்து விடுவார்கள். பிடிவாதம் பிடிப்பதில் அசகாய சூரர்கள். பல நாள் பட்டினியாக கிடக்க நேரிட்டாலும், தங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பிடிவாதம் என்று சொல்வதைவிட மன உறுதி என்று பாசிட்டிவாக சொல்லிக் கொள்ளலாம்.
அறிவுத்தாகம்
விருச்சிக ராசி குழந்தைகள், தங்களின் நேரத்தை வீணாக்குவது கிடையாது. அடுத்தவரின் நேரத்தையும் பொருளையும் வீணாக்கமாட்டார்கள். மிகவும் கட்டுசெட்டாக வாழத் தெரிந்த இவர்கள், எப்போதும் எந்நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
ஆர்வமுள்ள துறைகள்
விருச்சிக ராசி சிறுவர் சிறுமியருக்கு, வெயில் பிடிக்கும். வெளியே விளையாட பிடிக்கும். கடைகளுக்குப் போய் வரப் பிடிக்கும். அப்படியே உலகத்தை சுற்றி பார்த்து பல விஷ்யங்களைத் தெரிந்து கொள்ள பிடிக்கும்.
படிப்பில் ஆர்வம்
விருச்சிகராசி மாணவர்கள் படிக்கும்போது, இருக்கும் இடம் தெரியாமல் உட்கார்ந்து, ஹோம்ஒர்க் முழுவதையும் முடித்துவிடுவார்கள். அக்கா, அண்ணன், அம்மாவிடம் வந்து `எனக்கு சொல்லித் தாருங்கள். பாடம் தெரியவில்லை. நான் நாளைக்கு படிக்கிறேன். இப்போது வயிறு வலிக்கிறது’ என்று சாக்கு போக்கு சொல்லும் பழக்கம் கிடையாது. அமைதியாக இருந்தபடி அருகில் இருப்பவர்கள் படிக்கும் பாடத்தையும் சேர்த்து மனதில் வாங்கி படிப்பார்கள். இவர்கள் ஒன்றாம் வகுப்பு படித்தால், அக்காவின் மூன்றாம் வகுப்பு பாடமும் இக்குழந்தைக்கு அத்துபடி.
பல தொழில் பயில்வார்
விருச்சிக ராசி சிறுவர்கள், படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர்கள். இவர்களுக்கு அறிவுத் தாக்கம் அதிகம். வீட்டில் அம்மாவின் அன்றாட செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து தாமாகவே சமையல் கற்றுக் கொள்வார்கள். அப்பா டிவி பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சி களைக் கவனித்துப் பார்த்து உலக அறிவை / பொது அறிவை வளர்த்துக் கொள்வார்கள். அன்றாட அரசியல் சமூக நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு இவ்வளவும் தெரியும் என்பது அந்த வீட்டில் உள்ள யாருக்கும் தெரிந்திருக்காது. பாவம் அது ஒரு அப்பிராணி குழந்தை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அது எல்லோருடைய அறிவையும் சேர்த்து பெற்ற ஞானக் குழந்தையாக இருக்கும்.
பயமும் பாதுகாப்பும்
இயற்கையிலே பயந்த சுபாவம் கொண்ட விருச்சிக ராசிக் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் அண்டை அயலாரிடமும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக இவர்கள், தங்கள் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு அன்போடும் பரிவோடும் பாசத்தோடும் இருப்பார்கள். இவர்களுக்கு அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாது. அதுதான் இவர்களின் பலவீனம். இவர்கள் மிகுந்த மன வேதனையில் மன அழுத்தத்தில் இருப்பார்கள். ஆனால் அதை எவரிடமும் சொல்லாமல் சொல்லத் தயங்கியபடி தனக்குள்ளயே புதைத்துக் கொள்வார்கள். விருச்சிக ராசிக் குழந்தைகள் தங்களின் பிரச்னைக்கு தாமே தீர்வு காண முயல்வர். வேறு எவரிடமும் வாய்விட்டுச் சொல்லி அனுதாபத்தை உருவாக்கி தனக்கு உதவி கேட்க மாட்டார்கள். இவர்களிடம் மனம்விட்டு பேசினால் தங்களுக்கு நம்பிக்கையான ஓர் இருவரிடம் மட்டும் தங்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். இவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.
பெரியவர் யார்?
விருச்சிக ராசிச் சிறுவர்கள் மதிக்கும் பெரியவர்கள் யார் என்றால், இவர்களின் அன்றாடப் படிப்புக்கும் செயல்பாட்டுக்கும் இவர்கள் வகுக்கும் திட்டங்களுக்கும் நேர மேலாண்மைக்கும் உதவக் கூடியவர்கள் மட்டுமே. இவர்களின் நேரத்தை வீணடிப்பவர்களையும், இவர்களை அடிக்கடி வேலை சொல்பவர்களையும், சிறு பிள்ளை தானே என்று இவர்களை அலட்சியமாகக் கருதுபவர்களையும் விட்டு, இவர்கள் விலகிவிடுவது இயற்கை.
குழந்தைத்தன்மை அதிகம்
செவ்வாய் ஆதிபத்தியத்தில் உள்ள மேஷ ராசியை எவ்வாறு குழந்தை ராசி என்கிறோமோ, அதுபோலத்தான் விருச்சிக ராசியும். இது பார்வைக்கு அறிவு முதிர்ச்சி பெற்ற தோற்றத்துடன் காணப்பட்டாலும், இவர்களின் மனமும் குழந்தை மனம்தான். சில சமயம் இவர்கள் செய்வது சிறுபிள்ளைத்தனமாகக்கூட தோன்றும். அதற்குக் காரணம், இவர்கள் உள்ளத்தில் இருக்கும் குழந்தைத்தனம் தானே தவிர அறிவீனம் கிடையாது. இவர்களைக் குழந்தை போல அன்பாக அரவணைத்துப் பாதுகாத்து வைத்துக் கொண்டால் இவர்கள் பேரறிஞர்களாக உருவாகி நாட்டுக்கு நல்ல பல நன்மைகளை செய்வது உறுதி.
The post விருச்சிக ராசி குழந்தை விரும்பத்தக்க குழந்தை appeared first on Dinakaran.