“பாரப்பா அஷ்டமச் சனியின்
பலனதனைச் சொல்லக் கேளு
காசு பணம் நட்டமாகும்
கைத் தொழிலும் கெட்டுவிடும்
கடன்காரர் மொய்த்து நிற்பார்
கயவன் என்ற பெயரும் வரும்
கட்டியவள் கலகம் செய்வாள்
கடிமனையில் போர்க்களமாம்
கஷ்டமோ கஷ்டமப்பா
கால்நடையாய் அலைவான் மைந்தன்
பெற்றோரும் பகையாவார்
பிள்ளைகளும் சொற்கேளார்
உற்ற நண்பர் பகையாவார்
உறவுக்காரரும் பகையாவார்
ஊண் உறக்கம் கெட்டுவிடும்
உடல் நோயோ வதைவதைக்கும்
சீறிவரும் செந்நாக கண்டம்
சிறைபயமும் உண்டாகும் பார்
வீட்டினிலே உயிர்சேதம்
விசனத்துக்கோ பஞ்சமில்லை
வித்தைகளும் பலிக்காது
விவேகியும் மூடனாவான்
விதைத்த விதை முளைக்காது
விளைந்த பயிர் தேறாது
வியாபாரம் நட்டமாகி
வேற்றூருக்கு ஓட்டிவிடும்
அங்கேயும் பாரப்பா
அவதூறு வந்து சேரும்
அஷ்டலக்ஷ்மியும் மறைந்திடுவாள்
கண்டங்களும் தோன்றுமப்பா
அனல்பட்ட புழு போல்
அலறிடுவார் ஜாதகரே…’’
சரி, இது முழுக்க உண்மையா? என்று ஆராய்ந்தால், உண்மையில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். சில ஜோதிட சொலவடைகள் ஏதோ ஒரு காலத்தில் பேச்சு வழக்கில் ஏற்பட்டவை. அதற்கு வேறு அர்த்தங்களும் இருக்கலாம். ஆனால், இன்று அந்த சொலவடைகளை அப்படியே நூற்றுக்கு நூறு நம்புபவர்கள் இருக்கிறார்கள். அஷ்டமச் சனி என்பது ராசிக்கு கோசார ரீதியாக எட்டில் வரும்போது என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஜாதகத்தில் எட்டில் சனி இருந்து அதன் திசை நடக்கும் போது அஷ்டமச் சனி (திசை) என்று எடுத்துக் கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் இந்த அஷ்டமச் சனியை எப்படிப் புரிந்து கொள்வது? ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில், விதிகளைவிட அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பது முக்கியம். அது படிப்பதால் மட்டும் வராது. அனுபவத்தால் வரும். அந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் மாறும் என்பதால், ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னொருவருக்குச் சரியாக வராது.யாரோ ஒருவர் அஷ்டமச்சனி நடக்கும் போது படாத அவஸ்தை பட்டிருக்கிறார். அவர், தான் பட்ட அவஸ்தை போல்தான், அஷ்டமச்சனி உள்ள ஒவ்வொருவரும் படுவார்கள் என்று ஒரு வார்த்தையைச் சொல்லி இருப்பார். அது அப்படியே பரவி, ஜோதிட ரீதியாக இன்று எல்லோர் நாக்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்று சொன்னால், சனி என்ற கிரகம் மிகவும் கொடுமையான கிரகம். மாட்டினால் அவ்வளவுதான். சின்னா பின்னப்படுத்திவிடுவார் என்று கதை விட்டிருக்கிறார்கள்.
சனி திசையில் மாடி மேல் மாடி வைத்து வீடு கட்டி வாழ்ந்தவர்களும் உண்டு. சுபகிரகமான குரு தசையில் மாடி வீட்டை விற்றுவிட்டு தெருவில் வந்தவர்களும் உண்டு. எனவே, எந்தக் கிரகங்களும் ஒருவருக்கு முழுமையாக நன்மை செய்யும் என்று சொல்ல முடியாது. தீமை செய்யும் என்றும் சொல்ல முடியாது. அவை இருக்கக்கூடிய அமைப்பு மற்ற கிரகங்களுடைய இணைப்பு இவைகளை வைத்துக் கொண்டுதான் ஒரு கிரகத்தின் பலாபலனைச் சொல்ல முடியும். அதைவிட மிக முக்கியம் அந்த கிரகத்தின் தசாபுத்தி காலம். பொதுவாக, சனி கிரகம் என்பது இருளைக் குறிக்கக் கூடியது மெதுவாக நகரக் கூடியது. எனவே சனியின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது தெளிவற்றவர்களாகவோ, தவறாகப் புரிந்து கொள்பவர்களாகவோ இருப்பார்கள். அதைப் போலவே சோம்பல் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பது ஒரு பொதுவான விதி. சனியினுடைய குண காரகத்துவம் வலிமையாக இருக்கக்கூடிய ஒவ்வொரு ஜாதகர் குணங்களிலும் இந்த எதிர்மறை குணங்கள் எதிரொலிக்கத் தயங்காது. வேறு கோணத்தில், சனி கடுமையான உழைப்பையும் சோதனையையும் தரக்கூடியது. இந்த சோதனையை வென்றவர்கள் வெற்றிக்கொடி நாட்டி வாழ்வில் முன்னேறி விடுகிறார்கள். இப்படிப்பட்ட சோதனைகளை சந்தித்தபிறகு அவர்களுக்கு வருகின்ற எந்த சவால்களும் பெரிதாகத் தெரியாது. எனவேதான் சனி கொடுத்தால் அதை யாராலும் பறிக்க முடியாது.
பெரும்பாலும், அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் சனி எதையும் கொடுப்பதில்லை. காரணம், சனி அதிர்ஷ்டத்திற்கு உரிய கிரகம் அல்ல. அவர் ஒரு மடங்கு கூலி தருவதற்கு இரண்டு மடங்கு வேலையை வாங்கிவிடுவார். இதன் மூலமாக வேலைத்திறன்கூடும். சவால்களை ஏற்றுக் கொள்ளுகின்ற உறுதியான மனம் இருக்கும். வேதனைகளையும் துன்பங்களையும் தாங்கக்கூடிய இதயம் இருக்கும். எனவே, அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில் கிடுகிடுவென்று முன்னேறுவதற்கு வழி பிறக்கும்.பெரும்பாலும், சனியினுடைய ஆளுமையின் கடைசிப் பகுதி அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையைத் தரும். காரணம், சனியினுடைய காலம் 19 வருடங்கள். அந்த 19 வருடங்களையும் அனுபவத்தைக் கொட்டித் தரும் சனி, 12, 13 ஆண்டுகளிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறக்கூடிய வாய்ப்பைத் தந்து அதற்கு அடுத்து வரக்கூடிய புதன் தசையில் நல்ல ஸ்திதியை ஏற்படுத்தி தந்துவிடுவார். அஷ்டமச்சனியும் அப்படித் தான். முடியும்போது அவர் பாக்கியஸ்தானத்துக்கு நகர்வதால், நல்ல முன்னேற்றத்தைத் தருவார். அவர்களாகவே பெற வைப்பார்.
உதாரணமாக, ஒரு மிதுன லக்னக்காரருக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். சனி திசை அவருக்கு பல சோதனையைத் தரத்தான் செய்யும். ஆனால், சனி எட்டுக்கும் ஒன்பதுக்கும் உரியவராக இருப்பதால், அஷ்டமத்துப் பலனை முதலில் அனுபவித்துவிட்டு, அதற்கு அடுத்து இருக்கக் கூடிய பாக்கிய ஸ்தானத்தினுடைய பலனை அவர்கள் பெற ஆரம்பித்து விடுவார்கள். அதாவது, முன் பகுதி உழைப்பும், பின் பகுதி அதன் பலனாக ஏற்றமும் கிடைக்கும் என்பதுதான் இந்த எட்டு ஒன்பது இணைப்பு. அதற்கு அடுத்த தசை, புதன் தசையாகப் போய்விடுகிறது. புதன் மிதுன லக்னத்துக்காரர்களுக்கு லக்னாதிபதியாக ஆகிவிடுவதால் முதல் தர யோகக் காரனாக மாறிவிடுவார். எனவே, சனி திசையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்ந்து அடுத்தடுத்த திசைகளிலும் வளர்ச்சிப் பாதையில் நிற்கும் என்பதால் சனி கொடுத்தால் யார் தடுக்க முடியும் என்று சொல்லி வைத்தார்கள். “உழைப்பு உயர்வைத் தரும்” என்பதுதான் அகப்பட்டவனுக்கு அஷ்டமச்சனி என்பது. சனி பல சிரமங்களைத் தந்தாலும், அந்த சிரமங்களை எல்லாம் அனுபவங்களாக எடுத்துக் கொள்கிறவர்கள். வாழ்வில் அந்த சிரமத்திற்கான பலனை அடைந்துவிடுவதை நடைமுறையில் பார்க்கலாம். அதற்குப் பிறகு வாழ்க்கை அவ்வளவு துன்பமாகவே இருக்காது. அதுதான் பட வேண்டிய துன்பம் எல்லாம் பட்டாகிவிட்டதே, பிறகென்ன துன்பம்? பாம்புக்கடியில் பிழைத்தவனுக்கு கொசுக்கடி வலிக்கவா செய்யும்?“அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி” என்பதை இப்படிக்கூட நான் யோசித்துப் பார்ப்பது உண்டு. அதர்மமான காரியங்களில் அகப்பட்டவர்கள், சட்ட விரோதமான காரியங்களில் அகப்பட்டவர்கள், தேவையற்ற பகைகளை விலை கொடுத்து வாங்கி அகப்பட்டவர்கள், உழைப்பில்லாத சோம்பேறித்தனத்தில் அகப்பட்டவர்கள் இவர்களுக்கெல்லாம் சனி அஷ்டமத்தில் இருந்தால் மட்டுமல்ல எங்கே இருந்தாலும் அஷ்டமச்சனி போலவே துன்பத்தைத் தருவார். நேர்மையாக உள்ளவனுக்கும் உழைப்பாளிகளுக்கும் சனி எந்தத் துன்பத்தைத் தந்தாலும் அதற்கு பரிசாக இன்பத்தை அள்ளி அள்ளித் தருவார்.
The post அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனியா? appeared first on Dinakaran.