சேலத்தில் ‘வின்ஸ்டார்’ மோசடி வழக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்கள் ரூ.13.5 லட்சத்தில் தயாரிப்பு

சேலம்: சேலத்தில் வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர் ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார். தன்னிடம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். இவரை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கடன் வாங்கி முதலீடு செய்தனர்.  ஆனால், நிறுவனத்தை மூடி விட்டு, பல கோடி பணத்துடன் சிவக்குமார் தலைமறைவானார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், சிவக்குமார் உள்பட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிவக்குமார் வாங்கி குவித்துள்ள நிலத்தை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 1686 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஏற்கனவே 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 30 பேருக்கும் தலா 50 ஆயிரம் பக்கம் நகல் கொடுக்க வேண்டும்.

இதற்கு ரூ.13.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, ஜெராக்ஸ் எடுக்க டெண்டர் விடப்பட்டது. இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் எடுக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கு வரும் 5ம்தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சேலத்தில் இருந்து குற்றப்பத்திரிகை நகல், கோவைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

The post சேலத்தில் ‘வின்ஸ்டார்’ மோசடி வழக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்கள் ரூ.13.5 லட்சத்தில் தயாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: