பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-141, 142, 169, 170க்குட்பட்ட 6 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை துணை மேயர் மு. மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள 200 வார்டுகளில் தற்போது 393 உணவகங்களும், நோயாளிகள் மற்றும் அவர்களின் துணை வருபவர்கள் பயன்பெறும் வகையில் 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்கள் மூலமாக 01.04.2022 முதல் 31.03.2023 வரை 6.70 கோடி இட்லிகளும், 1.53 கோடி பலவகை சாதங்களும், 2.65 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டதன் விளைவாக 5.3 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 2022-23 ஆம் நிதியாண்டில் விற்பனை தொகையை (ரூ.15.81 கோடி) விட செலவினத் தொகை (ரூ.97.86 கோடி) அதிகமாக அதாவது ரூ.82.05 கோடி அதிகமாக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேவை மனப்பான்மையோடு ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வண்ணம் செயல்படுத்திட வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி இன்று அனைத்து அம்மா உணவகங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இச்செலவீனத் தொகை முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி செலவினங்களில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே பசியாறும் பொருட்டு தொடங்கப்பட்ட நடமாடும் அம்மா உணவகம் என்னும் திட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் மூன்று வாகனங்கள் மூலம் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 1,09,959 கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் அம்மா உணவாக சீரமைப்பு பணிகளுக்காக சென்ற ஆண்டை காட்டிலும் ரூ.4.5 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து (மொத்தம் ரூ.9 கோடி), மண்டல அளவிலேயே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கே.ஆர்.கதிர்முருகன், மண்டல அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post சைதாப்பேட்டை, தியாகராயநகரில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார் சென்னை மாநகராட்சி துணை மேயர் appeared first on Dinakaran.