அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதிப்பு!

சென்னை: அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் மற்றும் பல ஒளிவிளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏர் ஹாரன் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விதிகளுக்கு புறம்பாக வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் இருந்து வருகிறது.

அதேபோல், எதிரில் வரும் வாகன ஓட்டுநர் மற்றும் சாலையில் செல்வோரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அதிக ஒளி வெளியிடும் முகப்பு விளக்குகள் மற்றும் பல வண்ண ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட வாகன சோதனையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், பல வண்ண ஒளி விளக்குகள் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 639 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த நவ.1ம் தேதி 12 போக்குவரத்து மண்டலங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்க பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்து சோதனை சாவடிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் போது 3,667 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகளை மீறிய 639 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 94 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.

1,059 வாகனங்களில் இருந்து ஏர் ஹார்ன்களும், 180 வாகனங்களில் இருந்து பல வண்ண ஒளி விளக்குகளும் அகற்றப்பட்டது. இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைள் தொடரும். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: