சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால் உலகம் முழுவதிலும் இந்த தொழில்நுட்பம் பரவலாக பின்பற்றப்படுகிறது. சோலார் மின் உற்பத்தி தகடுகள் மூலம் நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது ஒரு வகை என்றால், மின்சாரத்தை பேட்டரிகள் மூலம் சேமித்தும் பயன்படுத்துவது மற்றொரு வகை. பகல் நேரங்களில் நேரடியாக பயன்படுத்திக் கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரிகளில் சேமித்த மின்சாரத்தை பயன்படுத்தலாம். இதற்கு ஒன்றிய மாநில அரசுகளின் மரபு சாரா எரிசக்தி துறை சார்ந்த மானியங்கள் கிடைக்கும். சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட அளவின்படி மொத்த செலவில் 15 சதவீதம் மானியம் உண்டு. பள்ளி, மருத்துவமனை, முதியோர் ஓய்வு இல்லங்கள், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், சமூல நலக் கூடங்கள், பொது பயன்பாட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னையில் உள்ள பல அரசு கட்டிடங்களில் தற்போது, சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு, சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் சூரிய சக்தி மூலம் இயங்ககூடிய நவீன கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்காக நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் நவீன கழிப்பறை கட்டுவதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்துள்ளது. அதேநேரம், சுற்றுச்சூழலின் பாதிப்பைக் குறைப்பதற்கும், நவீன முறையில் பாதுகாப்பாகவும் 200க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் தற்போது 280 பொது கழிப்பறைகள் உள்ளன. புதியதாக 90 கழிப்பறைகள் கட்டப்பட்டு 370 கழிப்பறைகளாக உயர்த்தப்படும். புதிய கழிப்பறைகளை முதல்கட்டமாக திரு.வி.க நகர், மெரினா கடற்கரை, ராயபுரம் உள்ளிட்ட 90 இடங்களில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த 90 புதிய கழிப்பறைகள் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் விதமாக சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பான முறையில் கட்டப்படும்.
இந்த கழிப்பறைகளுக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி உதவி செய்கிறது. ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடலின் (HAM) கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நடைமுறையில் இருக்கிறது. இவை 40 சதவீதம் அரசாங்கமும், 60 சதவீதம் ஒப்பந்ததாரர்கள் ஏற்கும் பட்சத்தில் நடைமுறையில் உள்ளது. ஆனால், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் இந்த திட்டத்தில், ஒப்பந்ததார்கள் கட்டுமானத்தின் தொடக்கம் முதல், முடிவடையும் வரை திட்டத்திற்கு பொறுப்பாவார்கள். மேலும், இது பொது இடங்களில் பொது கழிப்பறைகளாகவும், சில குடியிருப்பு பகுதிகளில், அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மிக எளிமையான முறையில் மின்சார சிக்கனத்துடன் கட்டப்படுகிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் முயற்சியால் பெண்களுக்கென பிரத்யேகமாக ரூ.4.37 கோடியில் ஷீ டாய்லெட் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,’’ என்றனர்.
The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.270 கோடியில் சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய நவீன கழிப்பறைகள்: முதற்கட்டமாக 90 இடங்களில் அமைகிறது appeared first on Dinakaran.