ராயல் சேலஞ்சர்ஸ் ரன் குவிப்பு: கோஹ்லி 55, டு பிளெஸ்ஸி 45, லோம்ரர் 54

புதுடெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட் செய்தது. கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 82 ரன் சேர்த்தது. டு பிளெஸ்ஸி 45 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் அக்சர் படேல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து கோஹ்லி – மகிபால் லோம்ரர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர். கோஹ்லி 55 ரன் எடுத்து (46 பந்து, 5 பவுண்டரி) முகேஷ் குமார் பந்துவீச்சில் கலீல் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய லோம்ரர் அரை சதம் அடித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. லோம்ரர் 54 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), அனுஜ் ராவத் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் 2, கலீல் அகமது, முகேஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.

The post ராயல் சேலஞ்சர்ஸ் ரன் குவிப்பு: கோஹ்லி 55, டு பிளெஸ்ஸி 45, லோம்ரர் 54 appeared first on Dinakaran.

Related Stories: