ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை துவக்கம் 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஈபிள் டவர் உருவம் அமைப்பு

 

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்கவில் ரோஜா கண்காட்சி நாளை துவங்குகிறது. சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க 40 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன ஈபிள் டவர், ஊட்டி 200, யானைகள், கால்பந்து, டென்னிஸ் பேட் உட்பட பல்வேறு அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை சீசனை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இது தவிர படகு போட்டி, நாய்கள் கண்காட்சி ஆகியன நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நாளை (13ம் தேதி) ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, ரோஜா தோட்டம் பராமரிப்பு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்வது வாடிக்கை.

இம்முறை 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட ஈபிள் டவர் அமைக்கப்படுகிறது. மேலும், 30 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஊட்டி 200, யானைகள், டென்னிஸ் பேட்,
கால்பந்து, மஞ்சப்பை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுத்த பணிகள் நடந்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் அலங்கார பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், ரோஜா மலர்களால் பல வகையான சிறிய அலங்காரங்கள், ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. ரோஜா மலர்களை கொண்டு தயாரிக்கப்படும் பல்வேறு தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ரோஜா கண்காட்சி நாளை துவங்கும் நிலையில், தற்போது ரோஜா பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. மேலும், அரங்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

* மலர் கண்காட்சியை முன்னிட்டு 19ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு வரும் 19ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி வரும் 19ம் தேதி (வெள்ளி) துவங்குகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்கு பதிலாக வரும் ஜூன் மாதம் 3ம் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை துவக்கம் 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஈபிள் டவர் உருவம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: