சாலை பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்

சென்னை: சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்கள் இல்லாத சாலை என்ற இலக்கை அடைய, பொது மக்களின் துணையோடு சாலையில் பள்ளங்களை கண்டறிந்து, குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்தின் அடிப்படையிலான ‘நம்ம சாலை’ என்ற மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இச்செயலியின் மூலம், நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு, சரி செய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், ‘நம்ம சாலை’ செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளித்த பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும்.

இதனால், சாலையில் உள்ள பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமால்லாமல், பொதுமக்களின் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும். இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமில்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்குப் போன்றவற்றைக் குறித்தும் புகார்கள் அளிக்க இயலும். இந்த நிகழ்ச்சியில், செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் பிரபாகர், முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை, தலைமை பொறியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை, இயக்குநர் நெடுஞ்சாலை ஆராய்சி நிலையம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சாலை பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: